/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாலைப்பணி இழுபறி: துாசியால் மக்கள் அவதி
/
சாலைப்பணி இழுபறி: துாசியால் மக்கள் அவதி
ADDED : ஜூலை 10, 2025 10:59 PM

திருப்புத்துார்; திருப்புத்துாரில் சிங்கம்புணரி ரோட்டையும் காரையூர் புதுவளவு வழியாக பொன்னமராவதி செல்லும் ரோட்டையும் இணைக்கும் சாலைப்பணி ஆமை வேகத்தில் நடப்பதால் எழும் துாசியால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
திருப்புத்துார் ஒன்றியம் காரையூரிலிருந்து புதுவளவு வழியாக கண்டவராயன்பட்டி ரோட்டை இணைக்கும் சாலை பிரதம மந்திரி பிரதான சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்படுகிறது. கடந்த ஆண்டில் துவங்கிய இந்தப் பணி ஆமை வேகத்தில் நடைபெறுகிறது.
தற்போது ரோட்டில் பெரிய ஜல்லி பரப்பி இரு மாதங்களாகி விட்டது. சில நாட்களுக்கு முன் ரோட்டோரத்தில் கொட்ட கிராவல் மண் போடும் பணி நடந்தது. மீண்டும் பணி தொடரவில்லை. இப்படி மாதக்கணக்கில் பணி நடைபெறுவதால் இப்பகுதி கிராமத்தினர் போக்குவரத்திற்கு சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
காரையூர் நல்லியப்பன் கூறுகையில், வாகனங்கள் செல்லும் போது பறக்கும் துாசியால் இப்பகுதி வீடுகளில் வசிப்பவர்கள் சிரமப்படுகின்றனர்.
ரோடு பணியை விரைந்து முடித்தால் தான் நாங்கள் உடல் நலத்துடன் வாழ முடியும். இந்த ரோட்டில் கண்மாய் சின்னமடைக்கு கட்டிய பாலம் இரும்புக்கம்பி பயன்படுத்தவில்லை. மடையிலிருந்து செல்லும் வாய்க்காலை சீரமைக்கவும் இல்லை.' என்றார்.
புதுவளவு போஸ் கூறுகையில், தார் போடாத ரோட்டில் டூ வீலரில் செல்ல முடியவில்லை. குறிப்பாக இரவு நேர போக்குவரத்திற்கு மிகவும் சிரமமாக உள்ளது. பணிக்கான காலமும் முடிந்து விட்டது. வேகமாக ரோடு போட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மழை காலம் வந்து விட்டால் போக்குவரத்து பாதிக்கும்' என்றார்.
ஊராட்சி ஒன்றியத்தினர் கூறுகையில், தற்போது கண்டவராயன்பட்டி ரோடு பணி நடைபெறுகிறது. அது முடிந்த சில நாட்களில் காரையூர் ரோடு பணி முடிக்கப்படும்' என்றனர்.