ADDED : மார் 21, 2025 06:55 AM

திருப்புவனம் : நான்கு வழிச்சாலையில்மரங்களுக்கு அடியில் குப்பையை கொட்டி தீ வைத்ததால் மரங்கள் கருகி வருகின்றன.
திருப்புவனம் பேரூராட்சியில் 18 வார்டுகளில் தினசரி ஆறு டன் குப்பை சேகரிக்கப்படுகின்றன. பேரூராட்சி குப்பை கிடங்கு நிரம்பி விட்டதால் காலியிடங்கள் முழுவதும் பேரூராட்சி ஊழியர்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.
குப்பைகளை தரம் பிரித்து அழிக்காததுடன் நான்கு வழிச்சாலை, வைகை ஆறு, திதி பொட்டல் என அனைத்து இடங்களிலும் குப்பைகளை கொட்டி குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் தீவைத்து அழித்து வருகின்றனர்.
மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலையில் நரிக்குடி விலக்கு அருகே சாலையின் இருபுறமும் நான்கு வழிச்சாலை நிர்வாகம் நிழல்தரும் மரங்களை கடந்த ஐந்து ஆண்டுகளாக வளர்த்து வருகிறது.
கோடை வெயில் மக்களை வாட்டி வரும் நிலையில் மரங்கள் இருப்பதால் ஓரளவிற்கு வெயிலின் தாக்கம் குறைந்து வருகிறது. நான்கு வழிச்சாலையில் மரங்களுக்கு அடியில் கொட்டப்பட்ட குப்பைகளுக்கு அடிக்கடி தீ வைத்ததால் அங்கிருந்த 7க்கும் மேற்பட்ட மரங்கள் கருகி காட்சியளிக்கிறது.
மரங்கள் தீயில் கருகியது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது இருக்கும் மரங்களை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.