/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துார் அருகே ரூ.30 லட்சம் வீண்! பயனில்லாமல் போன உடற்பயிற்சி கூடம்
/
திருப்புத்துார் அருகே ரூ.30 லட்சம் வீண்! பயனில்லாமல் போன உடற்பயிற்சி கூடம்
திருப்புத்துார் அருகே ரூ.30 லட்சம் வீண்! பயனில்லாமல் போன உடற்பயிற்சி கூடம்
திருப்புத்துார் அருகே ரூ.30 லட்சம் வீண்! பயனில்லாமல் போன உடற்பயிற்சி கூடம்
ADDED : மே 16, 2024 06:52 AM

2016ல் ஜெ. முதல்வராக இருந்த போது ஊரக வளர்ச்சித்துறை மூலம் கிராம ஊராட்சிகளில் அம்மா பூங்கா மற்றம் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது.
திருப்புத்துார் ஒன்றியம்காட்டாம்பூர் ஊராட்சியில்தேவரம்பூர் செல்லும் ரோட்டில் ரூ 30 லட்சம் மதிப்பில் பூங்கா மற்றும்உடற்பயிற்சிக்கூடம் அமைக்கப்பட்டது. மேலும் கூடுதலாக நிதி ஒதுக்கி ஆழ்குழாய் வசதி, அழகுச்செடிகள் நடவு போன்ற வசதிகளும் உருவாக்கப்பட்டது.
உடற்பயிற்சிக் கூடத்தில்நவீன உடற்பயிற்சி கருவிகளான லெக் பிரஸ், ஏர் வாக்கர், ஹிப் ட்விஸ்டர், டபுள் ஸ்பின், சோல்டர் பில்டர், எக்ஸர்ைஸஸ் சைக்கிள், வெயிட் லிப்ட் செட், ட்விஸ்டர், மல்டி ஜிம் உள்ளிட்ட பல கருவிகள் இங்கு பொருத்தப்பட்டது. பூங்கா பகுதியிலும் இதற்கென பிரத்யேகமாக கட்டப்பட்ட அரங்கிலும் நிறுவப்பட்டன. அரங்கில் மின் இணைப்பும் தரப்பட்டது.
பூங்கா பகுதியில் நடைபயிற்சிக்கான டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதையும் சுற்றிலும் அமைக்கப்பட்டது. அழகான செடிகளும், புற்களும் நடப்பட்டன. மேலும் சிறுவர்கள் விளையாட ஊஞ்சல் வசதியும் உருவாக்கப்பட்டது. தண்ணீர் வசதியுடன் குளியலறை, கழிப்பறை வசதியும் கட்டப்பட்டது.
தற்போது இந்த உடற்பயிற்சிக் கூடம் பராமரிப்பு, பாதுகாப்பு இல்லாமல் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் போய்விட்டது. நடைபாதையில் கற்கள் பெயர்ந்தும், கருவிகள் துருப்பிடித்து செயலற்றும் உள்ளன. சில கருவிகளின் பாகங்கள் திருடு போய் விட்டன.
மின் வயர்கள் முழுவதுமாக துண்டிக்கப்பட்டும், மின்விளக்குகள் திருடு போய் விட்டன. கழிப்பறை முற்றிலுமாக உடைத்து சிதைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் பெயரளவிற்கு கூட செடிகள், மரங்கள் இல்லை.
தேவரம்பூர் அஜீஸ் கூறுகையில், 'திறக்கப்பட்ட போது பலரும் இங்கு வந்து பயிற்சி பெற்றனர். ஆனால் பயிற்சி தர யாரும் இல்லை. இங்குள்ள கருவிகளில் தாமாக பயிற்சி எடுக்க முடியாது, இதனால் நல்ல பயிற்சியாளர் மற்றும் காவலர் இருந்தால் நன்றாக இருக்கும்' என்றார்.
ஊராட்சி ஒன்றியத்தினர் கூறுகையில், 'பூங்காவிற்கான பராமரிப்பு நிதி, பாதுகாவலர் குறித்து ஏதும் இதுவரை அரசு அறிவிக்கவில்லை. ஊராட்சியில் பூங்கா ஒப்படைக்கப்பட்டுஉள்ளது. தேர்தல் காலம் முடிந்த பின் பராமரிக்க நிதி கோரப்படும். கிராமத்தினர் தன்னார்வலர்கள் மூலம் பராமரிக்க திட்டமிடப்படும்' என்றனர்.
ஊராட்சி மன்றத்தினர் கூறுகையில், 'நிதி ஒதுக்கீடு செய்து பராமரித்து மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பராமரிப்பில் அனுமதித்தும் நல்ல பலனில்லை. காவலர், பயிற்சியாளர் நியமிக்க முயற்சி எடுப்போம்' என்றனர்.
கிராமத்திற்குள் அமைக்காமல் கிராமத்திற்கு வெளியே மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில்அமைக்கப்பட்டதே இந்த பயிற்சிக்கூடத்தை கிராமத்தினர் பயன்படுத்த முடியாமல் போனதற்கான காரணம். சமூக விரோதிகளால் சேதப்படுத்தவும், திருடவும் நல்ல வாய்ப்பாகவும் அமைந்து விட்டது. தவறான இடத்தேர்வால் 30 லட்சம் நிதி வீணானது தான் மிச்சம்.
ஊராட்சியினர் மற்றும் ஊராட்சி ஒன்றியத்தினர் இந்தப் பயிற்சிக்கூடத்தை மீண்டும் செயல்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.