/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனம் வைகையில் விதிகளை மீறி மணல் எடுப்பு
/
திருப்புவனம் வைகையில் விதிகளை மீறி மணல் எடுப்பு
ADDED : அக் 31, 2025 11:30 PM

திருப்புவனம்: திருப்புவனம் வைகை ஆற்றில் பாலம், தடுப்பணை அருகில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதால் கட்டுமானங்கள் வலுவிழக்கும் நிலை உருவாகிறது.
வைகை ஆற்றை கடக்க பாலங்கள், விவசாயத்திற்கு பாசனத் தேவைக்காக தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. பாலத்தின் அருகில் மணல் அள்ளப்பட்டால் மணல் அரிப்பு ஏற்பட்டு பாலத்தின் தாங்கு திறன் பாதிக்கப்படும். எனவே பாலத்தில் இருந்து 100 மீட்டர் துாரத்திற்கு மணல் அள்ளக்கூடாது என்பது விதி.
அதனையும் மீறி நேற்று காலை திருப்புவனம் வடகரை ஆண்கள் பள்ளி அருகே வைகை ஆற்றினுள் இயந்திரம் மூலம் மணல் அள்ளப்பட்டு டிராக்டர்களில் எடுத்துச் செல்லப்பட்டது.
வைகை ஆற்றினுள் மணல் அள்ளப்படும் இடத்தில் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் யாருமே இல்லை. பேரூராட்சி துாய்மை பணியாளர் குடியிருப்பு அருகே மண் சரிவை தடுப்பதற்காக மணல் அள்ளப்படுவதாக தெரிவித்தனர்.
பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் யாருக்கும் மணல் அள்ளப்படுவது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அழகுராஜா கூறுகையில்:
துாய்மை பணியாளர் குடியிருப்பு அருகே நீரோட்டத்தால் விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது, இடத்தை பார்வையிட்ட கோட்டாட்சியர் அதனை சரி செய்ய உத்தரவிட்டதால் பேரூராட்சி மூலம் மணல் அள்ளி சரி செய்ய முயன்றோம். பிரச்னை ஏற்பட்டதால் நிறுத்தி விட்டோம், என்றார்.
கானுார் தடுப்பணை பணிக்காக கட்டுமான பொருட்களை வைக்க திருப்புவனம் புதுாரில் ஆற்றினுள் சமதளம் ஏற்படுத்தப்பட்டது.
பொருட்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக சமதளத்தைச் சுற்றிலும் மண் அணை ஏற்படுத்தப்பட்டது. கானுார் அணை பணிகள் முடிவடைந்து பொருட்களை காலி செய்து விட்டனர்.
அங்கிருந்து திருப்புவனம் நகர்ப்பகுதிக்கு கட்டுமான பணிக்காக பகலிலேயே தலைச்சுமையாக மணல் அள்ளி வருகின்றனர், இதனால் ஆங்காங்கே பள்ளங்கள் உருவாகி வருகின்றன. தொடர்ச்சியாக மணல் அள்ளப்படுவதால் தடுப்பணை பாதிப்படையும் அபாயம் உள்ளது.
வைகை ஆற்றில் நீரோட்டம் இருப்பதால் கரையை ஒட்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக பலரும் மணல் அள்ளி வருகின்றனர். இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

