/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தெருவிளக்குகளை உடைக்கும் மணல் திருட்டு கும்பல்
/
தெருவிளக்குகளை உடைக்கும் மணல் திருட்டு கும்பல்
ADDED : டிச 27, 2024 04:58 AM
திருப்புவனம்: திருப்புவனத்தில் மணல் திருட்டு கும்பல் தெரு விளக்குகளை பழுதாக்கி விட்டு திருட்டில் ஈடுபடுவதால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாட வேண்டியுள்ளது.
சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் அரசு மணல் குவாரி ஏதும் செயல்படவில்லை. கட்டுமான பணிக்கு முழுக்க முழுக்க எம் சாண்ட் மணலை நம்பியே இருக்க வேண்டியுள்ளது. கட்டுமான பணிகளில் சென்ட்ரிங் மற்றும் துாண் அமைக்க ஆற்று மணல் தான் சிறந்தது என கட்டட உரிமையாளர்கள் நம்புகின்றனர். எனவே இதற்கு மட்டும் திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்படும் மணலை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்களுக்காக திருப்புவனம் புதுார் வைகை ஆற்றுப்படுகையில் இரவு நேரங்களில் டூவீலர்களில் பலரும் மணல் திருடுவதில் ஈடுபட்டு வருகின்றனர்.
நம்பர் பிளேட், உரிய ஆவணங்கள் இல்லாத டூ வீலர்களில் மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு பத்து மணிக்கு தொடங்கி விடிய விடிய மணல் திருட்டில் ஈடுபடுகின்றனர்.
பகல் நேரங்களில் கரைகளில் அமர்ந்திருக்கும் இக்கும்பல் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் மணல் அள்ளி சாக்கு மூடைகளில் நிரப்பி கரையில் அடுக்கி வைத்து கொள்கின்றனர். இரவு நேரங்களில் கட்டட பணி நடைபெறும் இடங்களில் கொட்டி விட்டு வருகின்றனர்.
மதுரைக்கு சரக்கு வேனில் கொண்டு சென்று விநியோகித்து வருகின்றனர். இரவு நேரங்களில் தெருவிளக்குகள் எரிந்து வெளிச்சம் தருவதால் ஆங்காங்கே பொருத்தியுள்ள சி.சி.டி.வி., கேமராக்களில் பதிவாக வாய்ப்புள்ளது. எனவே தெருவிளக்குகளை இயக்கும் ஸ்விட்ச் பாக்ஸ், ஸ்விட்ச் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி விடுகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் பத்திற்கும் மேற்பட்ட முறை ஸ்விட்ச் பாக்ஸ் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
அடிக்கடி ஸ்விட்ச் பாக்ஸ் சேதமடைவதால் பேரூராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க மறுப்பதால் பொதுமக்கள் இருட்டிலேயே நடமாட வேண்டியுள்ளது. மாரியம்மன் கோயில் தொடங்கி புதுார் வரை தெருவிளக்குகள் எரிவதே இல்லை. மாவட்ட நிர்வாகம் தெருவிளக்குகளை சேதப்படுத்தும் மணல் திருட்டு கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.