/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
துாய்மைப்பணியாளர்களுக்கு 12 மணி நேர வேலை வாரிய கூட்டத்தில் புகார்
/
துாய்மைப்பணியாளர்களுக்கு 12 மணி நேர வேலை வாரிய கூட்டத்தில் புகார்
துாய்மைப்பணியாளர்களுக்கு 12 மணி நேர வேலை வாரிய கூட்டத்தில் புகார்
துாய்மைப்பணியாளர்களுக்கு 12 மணி நேர வேலை வாரிய கூட்டத்தில் புகார்
ADDED : ஆக 02, 2025 12:42 AM
சிவகங்கை: அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் துாய்மை பணியாளர்களை குறைந்த சம்பளத்தில் தனியார் நிர்வாகம் 12 மணி நேரம் வேலை வாங்குவதாக, சிவகங்கையில் நடந்த துாய்மை பணியாளர் நல வாரிய கூட்டத்தில் புகார் தெரிவித்தனர்.
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் துாய்மை பணியாளர் நல வாரிய கூட்டம் நடந்தது. கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். தாட்கோ மாவட்ட மேலாளர் செலினா வரவேற்றார்.
துாய்மை பணியாளர் மாநில நல வாரிய தலைவர் ஆறுச்சாமி, துணை தலைவர் கனிமொழி, உறுப்பினர் மகாலிங்கம், தமிழரசி எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஆனந்தி பங்கேற்றனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
ஆனந்தி, முத்துப்பட்டி: சிவகங்கை அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறேன். மாதம் ரூ.13,100 தான் சம்பளம் தருகின்றனர். வாரவிடுமுறை இல்லை. அரசு இலவச வீடுகள் திட்டத்தில் வீடு வழங்க வேண்டும்.
பாண்டி, படமாத்துார்: நானும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் துாய்மை பணியாளராக உள்ளேன். அங்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. எங்களை ஒப்பந்ததாரர்கள் மிரட்டுகின்றனர். சம்பளத்திற்கு மேலாக பணிகளை செய்ய வைக்கின்றனர். இதை கேட்டால் வஞ்சிக்கின்றனர்.
கலெக்டர்: புதிதாக துாய்மை பணியாளர்களுக்கு 67 வீடுகள் குடிசை மாற்று வாரியம் மூலம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வீடு கோரி 50 மனு வந்துள்ளது. அதையும் பரிசீலிக்கிறோம். இன்பவள்ளி, கீழக்கண்டனி: பல ஆண்டாக துாய்மை பணியாளராக உள்ள எனக்கு, வசிக்க வீடு இல்லை. வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.
ஆதிதிராவிடர் நலக்குழு பூமிநாதன்: அரசு மருத்துவமனையில் துாய்மை பணியாளருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.586 மட்டுமே சம்பளம் தருகின்றனர். ஆனால், 8 மணி நேர பணிக்கு 12 மணி நேரம் வேலை வாங்குகின்றனர். மேலும், அவர்களிடம் பிடித்தம் செய்த பி.எப்., பணத்தை திரும்ப பெற்றுத்தருவதில்லை.
மீனாட்சி, சிவகங்கை: அரசு மருத்துவமனையில் துாய்மை பணியாளராக பணிபுரிந்து இயற்கை மரணமடைந்தவர்களுக்கு 12 மாதமாக பி.எப்., பணத்தை தராமல் இழுத்தடித்து வருகின்றனர்.
வாரிய தலைவர் ஆறுச்சாமி: மாவட்ட அளவில் துாய்மை பணியாளர் 1700 பேர்களுக்கு ஸ்மார்ட் கார்டு (மஞ்சள் நிற கார்டு) வழங்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சிகளில் துாய்மை பணியாளர் சம்பளம் மாதம் ரூ.7500 ஆக உயர்த்த அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். மேலும் கலெக்டர் தலைமையில் மாதத்தில் ஒரு நாள் துாய்மை பணியாளர் குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும். இயற்கை மரணம் அடைந்தோருக்கு நிவாரண தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்திதர அரசிடம் கோரியுள்ளோம், இவ்வாறு விவாதம் நடந்தது. தாட்கோ உதவி மேலாளர் ஷிவானி நன்றி கூறினார்.