
வைகை ஆறு செல்லும் திருப்புவனம் பகுதியில் வடகிழக்கு பருவ மழையை நம்பி ஆகஸ்டில் நெல் நடவு பணிகளை விவசாயிகள் தொடங்குவார்கள். இந்தாண்டு வடகிழக்கு பருவமழையும் இல்லை.
கண்மாயிலும் தண்ணீர் இல்லை என்பதால் பெரும்பாலான விவசாயிகள் நடவு பணிகளை தொடங்கவே இல்லை. திருப்புவனம் வட்டாரத்தில் வடகிழக்கு பருவமழையை நம்பி பத்தாயிரம் ஏக்கரில் நெல் நடவு பணி நடப்பது வழக்கம்.
இந்தாண்டு 90 சதவிகித பணிகள் தொடங்காத நிலையில் பம்ப்செட் வைத்துள்ள ஒருசில விவசாயிகள் நெல் நடவு பணிகளை தொடங்கியுள்ளனர்.
அவர்களும் கூலி ஆட்கள் தட்டுப்பாடு காரணமாக இயந்திர நடவுக்கு மாறிவிட்டனர். இதற்காக மயிலாடுதுறையில் இருந்து இயந்திரங்களுடன் வந்துள்ள தொழிலாளர்கள் விதைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இயந்திரம் மூலம் நெல் நடவு செய்யும் போது ஒரு மணி நேரத்தில் நான்காயிரத்து 500 ரூபாய் செலவில் ஒரு ஏக்கர் நடவு செய்து முடித்து விடுகின்றனர். இயந்திர நடவு பணிகள் எளிமையாக இருப்பதால் பெரும்பாலான விவசாயிகள் இயந்திர நடவுக்கு மாறி வருகின்றனர்.
திருப்புவனம் அருகே அங்காடிமங்கலம் கிராமத்தில் 150 ஏக்கரில் நெல் நடவு செய்யப்படுகிறது.
மழை இல்லாததால் கிணறு வைத்துள்ள விவசாயிகள் இயந்திர நடவுக்கு மாறியுள்ளனர். கோ 51, என்.எல்.ஆர்., கருப்பு கவுனி உள்ளிட்ட நெல் ரகங்களை பயிரிட்டுள்ளனர்.
விவசாயி புயல்ராஜன் கூறுகையில் :
100 நாள் வேலை திட்டம் வந்ததில் இருந்து விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. நாற்றங்கால் அமைத்த பின் நாற்றுகளை பறித்து நடவு செய்ய ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும், இது தவிர வேலை செய்பவர்களுக்கு தனி செலவும் உண்டு.
இயந்திர நடவில் இதுபோன்ற பிரச்னைகள் இல்லை. இயந்திரம் வைத்திருப்பவர்களே நாற்றங்கால் அமைத்து தந்து விடுகின்றனர். பின் அவற்றை இயந்திரம் மூலம் வயலில் நடவு செய்து கொடுத்து விடுகின்றனர்.
அறுவடை நேரத்தில் இயந்திரம் மூலம் அறுவடை செய்வதும் எளிது என்கின்றனர். எனவே இயந்திர நடவிற்கு மாறிவிட்டோம், என்றார்.