ADDED : ஏப் 17, 2026 03:45 PM

திருக்கோஷ்டியூர்:வறட்சி பகுதியான திருப்புத்துார் அருகே அரளிக்கோட்டை பகுதியில் இரண்டாம் போக நெல்சாகுபடிப் பணிகளை விவசாயிகள் துவங்கியுள்ளனர்.
திருப்புத்துாரில் கடந்த ஆண்டு மணிமுத்தாற்றில் நீர் வரத்தால் ஏரியூர் கண்மாய் பெருகி ஏரியூர், திருக்கோஷ்டியூர்,வடமாவலி பகுதி கண்மாய்கள் பெருகின. இதனால் சில நிலங்களில் கோடை உழவுடன் நாற்று நடவும் நடந்து வருகின்றது. தண்ணீர் வசதி இருந்தும் மாடுகளின் தொந்தரவால் பாதுகாப்பான வயல்வெளிகளில் மட்டுமே உழவு,நடவுப்பணிகள் நடைபெறுகின்றன. அரளிக்கோட்டை பகுதியிலும் இரண்டாம் போக நெல் சாகுபடி ஆங்காங்கே நடந்து வருகிறது.
நாற்றங்காலிலிருந்தும், நாற்றுக்கட்டுகளை விலைக்கு வாங்கியும் பல வயல்களில் நடவுப்பணிகள் நடந்து வருகின்றன. வயலில் நடவு பணியில் உள்ள பெண்கள் நாற்றுக்களை வரப்பு, பாதையில் போட்டு அவ்வழியே செல்லும் கிராம பிரமுகர்களிடம் காணிக்கை வாங்குகின்றனர். 'குலவை நாற்று, முறை நாற்று' எனப்படும் இந்த முறை பல தலைமுறைகளாக உள்ளது. கண்மாய் நீர் இருப்பு மட்டுமின்றி, கிணறு பாசனம் உள்ளவர்கள் இரண்டாம் போக நெல்சாகுபடியில் இறங்கியுள்ளனர். இருப்பினும், கோடை மழை எதிர்பார்த்த அளவில் பெய்தால் நல்ல மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயப் பணிகளை செய்கின்றனர்.
