ADDED : பிப் 27, 2024 06:45 AM
திருப்புவனம், : திருப்புவனம், இளையான்குடி, மானாமதுரை பகுதி விவசாயிகளின் தேவைகளுக்காக விதை நெல் சுத்திகரிப்பு பணிகள் தொடங்கியுள்ளது.
திருப்புவனம் சம்பாதிடலில் விவசாயிகளிடம் இருந்து தரமான நெல் ரகங்கள் கொள்முதல் செய்யப்பட்டு அதனை சுத்திகரித்து விதை நெல்லாக விவசாயிகளுக்கு வழங்க விதை நெல் சுத்திகரிப்பு மையம் செயல்படுகிறது.
வேளான் துறை சார்பில் செயல்படும் விதை நெல் சுத்திகரிப்பு மையத்தில் மூன்று தாலுகா விவசாயிகளுக்கு வருடம்தோறும்தலா 60 டன் விதை நெல் வழங்கப்படுகிறது. என்.எல்.ஆர்., கோ 53, ஆர்.என்.ஆர்.,உள்ளிட்ட நெல் ரகங்களை விண்ணப்பிக்கும் விவசாயிகளிடம் குறிப்பிட்ட அளவு பரப்பில் நெல் பயிரிட வேளாண் துறை அனுமதி வழங்கும், செயற்கை உரம் பயன்படுத்தாமல் விவசாயிகள் நெல் ரகங்களை பயன்படுத்தி விளைவிப்பார்கள், அதனை வேளான் துணை அதிகாரிகள் அடிக்கடி நேரில் சென்று பார்வையிட்டு அறுவடை சமயத்தில் பதிவு செய்த விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்து சுத்திகரிப்பு மையத்தில் நெல்லை சுத்தம் செய்து வழங்கும்.
வருடம்தோறும் ஜனவரிமுதல் மார்ச் வரை செயல்படும் இந்த மையத்தில் கடந்த இரு மாதங்களாக விதை நெல் சுத்திகரிக்கப்பட்டு தாலுகா தலைநகரில்உள்ள வேளான் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழையை நம்பி செப்டம்பரில் பயிரிட உள்ள விவசாயிகளுக்கு இந்த விதை நெல் மான்ய விலையில் வழங்கப்படும்.
