ADDED : ஏப் 01, 2025 06:13 AM
காரைக்குடி: காரைக்குடியில் பழைய கேன்களில், குடிநீர் விற்பனை செய்யப்படுவதால் மக்களுக்கு பல்வேறு உடல் உபாதை ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
காரைக்குடி மாநகராட்சி மற்றும் சாக்கோட்டை ஒன்றியத்தில் 6க்கும் மேற்பட்ட தண்ணீரை சுத்திகரித்து விற்கும் நிலையங்கள் உள்ளன. 20 லிட்டர் குடிநீர் கேன் ரூ.35க்கு விற்கப்படுகிறது. விலை கொடுத்து வாங்கும் குடிநீர் கேன்களின் தரத்தை அதிகாரிகள் உறுதி செய்வதோடு மக்களும் அறிந்து கொள்ள வேண்டும். ஆண்டுதோறும் வாட்டர் கம்பெனிகள் தங்களது நிறுவனங்களின் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும்.
இவ்வாறு நிறுவனங்கள்புதுப்பிப்பின் போது உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். குடிநீரில் கலக்கப்படும் வேதிப்பொருட்கள் அளவு சரியாக உள்ளதா, குடிநீர் கேன்கள் முறையாக சீல் வைக்கப்பட்டுள்ளதா, அழுக்கு படியாத தரமான கேன்கள் மக்களுக்கு வழங்கப்படுகிறதா என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
ஆனால் காரைக்குடி, சாக்கோட்டை வட்டாரத்தில் விநியோகம் செய்யப்படும் குடிநீர் கேன்கள் பூஞ்சை நிறைந்த, அழுக்கு படிந்த நிலையில் உள்ளதால் பொதுமக்கள் முகம் சுளித்து வேறு வழியின்றி வாங்கி குடிக்க வேண்டி உள்ளது.
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், வாட்டர் கேன்கள் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் பார்த்தால் தெளிவாக தெரிய வேண்டும். கேன் குடிநீரில் மூடியில் தயாரிப்பு தேதி பேட்ஜ் ஆகியவற்றை தயாரிப்பாளர்கள் பிரிண்ட் செய்திருக்க வேண்டும். குடிநீர் கேன் களின் மீது நேரடியாக சூரிய ஒளி படும்போது நீரின் தன்மை மாறிவிடும். திறந்த வாகனங்களில் குடிநீர் கேன்களை கொண்டு செல்லக்கூடாது.
இதுபோன்ற விதிமுறைகளை பின்பற்றும் படி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கம்பெனிகளில் ஆய்வு செய்து, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
