/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடி, மானாமதுரையில் சர்வர் கோளாறு
/
இளையான்குடி, மானாமதுரையில் சர்வர் கோளாறு
ADDED : நவ 14, 2025 04:22 AM
இளையான்குடி: இளையான்குடி, மானாமதுரை தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் சர்வர் கோளாறு காரணமாக பயிர் காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகினர்.
இளையான்குடி,மானாமதுரை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் போதிய மழை இல்லாத காரணத்தினால் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து வருகின்றனர்.
தற்போது இளையான்குடி தாலுகாவிற்கு உட்பட்ட சூராணம்,சாலைக் கிராமம், முனைவென்றி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் மானாமதுரை தாலுகாவிற்கு உட்பட்ட முத்தனேந்தல், ராஜ கம்பீரம், இடைக்காட்டூர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யும் நிலையில் நாளை நவ.15ம் தேதி இதற்கான காலக்கெடு முடிவடைய உள்ளதால் விவசாயிகள் பயிர் காப்பீட்டை விரைவாக பதிவு செய்து வருகின்றனர்.
நேற்று மானாமதுரை, இளையான்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பிரவுசிங் சென்டர்களில் பயிர் காப்பீடு செய்வதற்கு ஆதார் அட்டையை உள்ளீடு செய்த பிறகு வரும் ஓ.டி.பி., எண் வராமல் சர்வரில் கோளாறு ஏற்பட்டதால் நேற்று காலையில் இருந்து மாலை வரை விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.
நாளை ஒரு நாள் மட்டுமே அவகாசம் உள்ள நிலையில் ஏராளமான விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யாமல் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் பயிர் காப்பீடு செய்வதற்கான தேதியை நீட்டிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

