/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முகாமில் சர்வர் பிரச்னை மக்கள் ஏமாற்றம்
/
முகாமில் சர்வர் பிரச்னை மக்கள் ஏமாற்றம்
ADDED : ஆக 02, 2025 12:43 AM
காரைக்குடி: காரைக்குடியில் நடந்த உங்களுடன் முதல்வர் முகாமில் சர்வர் பிரச்னையால், மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். வி.ஏ.ஓ.,க்கள் சிலரும் கலந்து கொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது.
தமிழக அரசுத் துறைகளின் சேவைகள் மற்றும் திட்டங்களை மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்கும் வகையில் உங்களுடன் முதல்வர் முகாம் நடந்து வருகிறது. ஜூலை 15 தொடங்கி நவம்பர் வரை முகாம்கள் நடைபெறுகின்றன. இதில் ஜாதி சான்றிதழ், பட்டா மற்றும் பென்ஷன் மகளிர் உரிமைத்தொகை, மருத்துவ காப்பீட்டு, ஆதார் அட்டை திருத்தம் உட்பட பல்வேறு சேவைகள் ஒரே இடத்தில் பெற முடியும்.
அரசு அலுவலகங்களுக்கு பலமுறை சென்று தீர்வு கிடைக்காததால் பொதுமக்கள் இந்த முகாமில் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர்.
காரைக்குடி மாநகராட்சியில் 27, 28 மற்றும் 29 வது வார்டு பகுதிகளுக்கு சிறப்பு முகாம் நேற்று விசாலாட்சி மகாலில் நடந்தது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். ஆனால், முதியோர் உதவித்தொகை, ஆதார் உட்பட பல தேவைகளுக்கு வந்த மக்கள், சர்வர் பிரச்னை இருப்பதாக கூறி திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும் சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ.,க்கள் சிலருக்காக பல மணி நேரம் காத்து கிடந்து ஏமாற்றத்துடன் திரும்பியதாகவும் தெரிவித்தனர்.
அதிகாரிகள் கூறுகையில்: சர்வர் பிரச்னை சில நிமிடங்கள் இருந்தது. மீண்டும் சரி செய்யப்பட்டு சேவை முறையாக வழங்கப்பட்டது. வி.ஏ.ஓ., சிலர் வேறு பணிக்காக சென்றனர். ஆனால் பணியில் எதுவும் தடை இல்லை.