/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மெத்தனம் ...குப்பை நகராக மாறும் சிவகங்கை :நகராட்சி அதிகாரிகள் விழிப்பார்களா
/
மெத்தனம் ...குப்பை நகராக மாறும் சிவகங்கை :நகராட்சி அதிகாரிகள் விழிப்பார்களா
மெத்தனம் ...குப்பை நகராக மாறும் சிவகங்கை :நகராட்சி அதிகாரிகள் விழிப்பார்களா
மெத்தனம் ...குப்பை நகராக மாறும் சிவகங்கை :நகராட்சி அதிகாரிகள் விழிப்பார்களா
ADDED : டிச 21, 2025 06:08 AM

சிவகங்கை:சிவகங்கை நகராட்சி அதிகாரிகளின் அலட்சிய போக்கால் நகரில் முழுமையாக குப்பை சேகரிப்பு பணி நடைபெறுவதில்லை. துப்புரவு பணியாளர்களே விரும்பும் இடங்களில் கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகளுக்கு உட்பட்ட தெருக்கள், வணிக நிறுவனங்களில் அன்றாடம் குப்பையை சேகரித்து, சுத்திகரிப்பு செய்து உரமாக்கவும், எஞ்சிய குப்பையை சிமென்ட் கம்பெனிகளுக்கு அனுப்ப வேண்டும். இதற்காக நகராட்சி நிர்வாகத்தின் கீழ் நிரந்தர துாய்மை பணியாளர்களாக 56 பேரும், தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் 70 பேர் என இந்நகரில் சேகரமாகும் குப்பையை அகற்ற 126 பேர் வரை நியமிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு ஒரு டன் குப்பை சேகரிக்க நகராட்சி மூலம் ரூ.6,000 வீதம் வழங்கப்படுகிறது. தினமும் இங்கு 14 டன் வரை குப்பை சேகரமாகின்றன. இதில், 8 டன் மக்கும் குப்பைகளாகவும், 6 டன் மக்காத குப்பையாக பிரித்து வாரத்திற்கு 10 டன் வரை சிமென்ட் கம்பெனிக்கு அனுப்ப வேண்டும்.
ஆனால், அதற்கான இடமின்றி தெருக்களில் சேகரிக்கும் குப்பையை துாய்மை பணியாளர்கள் அந்தந்த தெருவின் கடைசியில் கொட்டி தீ வைத்து செல்கின்றனர். மேலும் நகரில் வீடுகளில் மட்டுமே குப்பையை வாங்குகின்றனர். தெருக்களை சுத்தம் செய்யும் பணி நடப்பதே இல்லை. மாவட்ட நிர்வாகமும் குப்பையை கொட்டி வைத்து அழிக்க இடம் ஒதுக்காமல் அடம்பிடித்து வருகிறது. நகராட்சி அதிகாரிகளும் இதற்கு நிரந்தர தீர்வு காண்பதில் அக்கறை எடுப்பதே இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.
இதனால் சிவகங்கை நகராட்சியில் குப்பை சேகரிக்கும் திட்டம் தோல்வியை தான் தழுவி வருகிறது. நகரில் குப்பை சேகரிக்க 126 பேர் சம்பளம் வாங்கினாலும், 50க்கும் மேற்பட்டவர்கள் குப்பை சேகரிக்கும் பணிக்கு வராமல், வருகை பதிவேட்டில் மட்டும் கையெழுத்திட்டு விட்டு வேறு இடங்களுக்கு சென்று விடுவதாகவும் சக ஊழியர்களே புகார் கூறுகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழாவில் கூட அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் பொற்கொடி முன் கார்த்தி எம்.பி., நகரில் குப்பை தேங்கி நகரே அலங்கோலமாக காணப்படுகிறது. இதற்கு நகராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என தெரிவித்தார். அதற்கு பின்னரும் இந்நகரில் குப்பையை முறையாக சேகரிக்கும் பணிகளை நகராட்சி நிர்வாகம் முழுமையாக மேற்கொள்ளவில்லை.

