/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காக்ளியர் இம்ப்ளான்ட் கருவி பொருத்துவதில் சிவகங்கை மருத்துவக்கல்லுாரி 2வது இடம்
/
காக்ளியர் இம்ப்ளான்ட் கருவி பொருத்துவதில் சிவகங்கை மருத்துவக்கல்லுாரி 2வது இடம்
காக்ளியர் இம்ப்ளான்ட் கருவி பொருத்துவதில் சிவகங்கை மருத்துவக்கல்லுாரி 2வது இடம்
காக்ளியர் இம்ப்ளான்ட் கருவி பொருத்துவதில் சிவகங்கை மருத்துவக்கல்லுாரி 2வது இடம்
ADDED : ஆக 29, 2025 05:32 AM
சிவகங்கை:பிறவியிலேயே காது கேளாத குழந்தைகளுக்கு காக்ளியர் இம்ப்ளான்ட் கருவி இலவசமாக பொருத்துவதில் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் பிறவிலேயே காது கேளாமையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் காக்ளியர் இம்ப்ளான்ட் கருவி பொருத்தப்படுகிறது.
காக்ளியர் இம்ப்ளான்ட் என்பது தீவிர காது கேளாதவர்களுக்கு ஒலி கேட்க உதவும் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படும் ஒரு கருவி. இக்கருவி காதின் உட்புறத்தில் உள்ள நத்தை வடிவ காக்ளியா மற்றும் கேட்கும் நரம்பை துாண்டி, மின் சமிக்ஞைகளை மூளைக்கு அனுப்பி ஒலிகளைப்புரிய வைக்கும்.
இதன்மூலம் காது கேட்கும் திறன் கிடைக்கும். பிறவியிலே காது கேளாமல் இருந்து வாய் பேச முடியாமல் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிக்சை செய்யப்படுகிறது.
குழந்தை பிறந்த 48 மணி நேரத்தில் குழந்தையின் செவித்திறனை இலவசமாக அறிந்து கொள்ளும் வசதி அனைத்து அரசு மருத்துவமனையிலும் உள்ளது. குறை கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கு 9 முதல் 18 மாதங்களுக்குள் இந்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.
தனியார் மருத்துவ மனையில் ஒரு குழந்தைக்கு ரூ.15 லட்சம் செலவில் செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சை அரசின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவசமாக செய்யப்படுகிறது. ஒன்பது மாதம் முதல் 6 வயது வரை காப்பீட்டு திட்டம் மூலம் சிகிச்சை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சையில் மாநில அளவில் சிவகங்கை மாவட்டம் இரண்டாமிடத்தில் உள்ளது.
அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குழந்தைகளுக்கு பின் பராமரிப்பு மூலம் மின்னணு சாதனத்துக்கான பேட்டரி உள்ளிட்ட பல்வேறு உதிரிப்பாகங்களை வழங்கியதில் தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 2016 முதல் இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இன்று வரை 140 குழந்தைகளுக்கு ரூ.9.50 கோடியில் காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

