/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பெரியாறு பாசனத்தில் சிவகங்கை கண்மாய் நீக்கம்; 40 ஆண்டில் தரிசான 2,000 ஏக்கர் நிலம்
/
பெரியாறு பாசனத்தில் சிவகங்கை கண்மாய் நீக்கம்; 40 ஆண்டில் தரிசான 2,000 ஏக்கர் நிலம்
பெரியாறு பாசனத்தில் சிவகங்கை கண்மாய் நீக்கம்; 40 ஆண்டில் தரிசான 2,000 ஏக்கர் நிலம்
பெரியாறு பாசனத்தில் சிவகங்கை கண்மாய் நீக்கம்; 40 ஆண்டில் தரிசான 2,000 ஏக்கர் நிலம்
ADDED : அக் 19, 2025 04:17 AM
சிவகங்கை: பெரியாறு பாசன பகுதியில் இருந்து நீக்கிய 32 கண்மாய்கள் மூலம் 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் தரிசாகி வருகின்றன.உரிய நீர் பங்கீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம், மேலுார் அருகே குறிச்சிபட்டி கண்மாயில் இருந்து பெரியாறு பாசன கால்வாய் துவங்குகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் இப்பாசன திட்டம் மூலம் ஷீல்டு, லெசீஸ், 48 வது கால்வாய், கட்டாணிபட்டி 1 மற்றும் 2 ம் கால்வாய் என 5 நேரடி கால்வாய்களில் கிடைக்கும் நீர் 136 கண்மாய்களை நிரப்புவதன் மூலம் 6,038 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இத்திட்டத்தில் காஞ்சிரங்காலில் இருந்து மறவமங்கலம் வரை, மதகுபட்டியில் இருந்து சிங்கம்புணரி வரையிலான மாணிக்கம் கால்வாய் விரிவாக்கம், நீட்டிப்பு பாசன பகுதிகளில் உள்ள 332 கண்மாய்கள் மூலம் கூடுதலாக 8,000 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும்.
பெரியாறு பாசன கால்வாயில் கடை மடை பகுதியாக இருப்பதால் சிவகங்கை மாவட்டத்திற்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. இக்கால்வாய் மூலம் பிரவலுார், கீழப்பூங்குடி, ஒக்கூர், பேரணிபட்டி, காஞ்சிரங்கால், கருங்காபட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 32 க்கும் மேற்பட்ட கண்மாய்களில் நீர் நிரப்பப்பட்டு வந்தது.
இக்கண்மாய்கள் மூலம் 2,000 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்றுவந்தன. ஆனால், இந்த கண்மாய்கள் திடீரனெ பெரியாறு பாசன கால்வாய் திட்டத்தில் இருந்த நீக்கப்பட்டு விட்டது.
இதற்கு விவசாயிகள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து விட்டுப்போன கண்மாய்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்பாசன துறை உறுதி அளித்தது. ஆனால் இது வரை பெரியாறு பாசன கால்வாயுடன் மீண்டும் இக்கண்மாய்கள் இணைக்கப்படவில்லை.
இந்நிலையில் பெரியாறு பாசன கால்வாய் மூலம் பயன்பெறும் பிற கண்மாய்கள் நிரம்பியதும் உபரி நீர் சருகணி, மணிமுத்தாறு, உப்பாறு, விருசுழி ஆறுகளில் திறந்து விடப்படுகின்றன. ஆனால், கால்வாய்களுக்கு அருகே உள்ள 30க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.
இதனால் கண்மாய்கள் மூலம் பாசனம் பெற்று வந்த விளைநிலங்கள் தரிசாக கிடக்கும் நிலை 40 ஆண்டுகளாக தொடர்ந்து நீடிக்கிறது.
எனவே நீக்கப்பட்ட கண்மாய்களை பெரியாறு பாசன கால்வாயுடன் இணைக்க வேண்டும். பொதுப் பணித்துறை நிர்வாக குளறுபடியால் நீக்கப்பட்ட பிரவலுார், கடம்பங்குடி, கீழப்பூங்குடி பெரிய, ஒக்கூர் கண்மாய்கள் உட்பட 32 கண்மாய்களில் பாசன நீர் சேகரமின்றி 2,000 ஏக்கர் நிலங்கள் முட்புதர்கள் மண்டி தரிசாக கிடக்கின்றன.
எனவே, தமிழக அரசு இதற்கு நிரந்தர தீர்வு காண உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
அரசியல் கட்சிகள் உறுதி தரவேண்டும் விவசாயி அப்துல் ரகுமான் கூறியதாவது, பொதுப் பணித்துறை நீர்வளத் துறையினரின் தவறான முடிவால் கடந்த 40 ஆண்டாக மதகுபட்டி, சிங்கம்புணரி, மறவமங்கலம் போன்ற பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு பெரியாறு பாசன நீரை பெற முடியாத நிலை தொடர்கிறது.
வரும் சட்டசபை தேர்தலில் விடுபட்ட சிவகங்கை மாவட்ட அனைத்து கண்மாய்களையும் பெரியாறு பாசன கால்வாயுடன் இணைக்கப்படும் என உறுதி அளித்து, நிறைவேற்றித்தரும் நம்பிக்கையை அரசியல் கட்சிகள் விவசாயிகளிடம் ஏற்படுத்த வேண்டும் என்றார்.