ADDED : ஆக 09, 2025 11:16 PM
சிவகங்கை:சிவகங்கை அருகே சாத்தரன்கோட்டையில் பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ.,இறந்தார்.
சிவகங்கை தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ.,யாக பணிபுரிபவர் கருப்பையா 57. இவரது சொந்த ஊர் மானாமதுரை கிருஷ்ணராஜா புரம். இவர் தற்போது குடும்பத்துடன் சிவகங்கை முத்து நகரில் வசித்து வருகிறார்.
இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகனும் போலீசாக பணிபுரிகிறார். கருப்பையாவிற்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கருப்பையா சாத்தரன்கோட்டையில் உள்ள செக்போஸ்டில் இரவு பணிக்கு சென்றார்.
நேற்று காலை பணி முடிந்ததும் பணி மாற்றுவதற்காக வந்த எஸ்.எஸ்.ஐ., விஜயகுமாரிடம் எனக்கு மிகவும் சோர்வாக உள்ளது. தண்ணீர் குடித்து விட்டு சிறிது நேரம் துாங்கி விட்டு செல்கிறேன் என்று கூறி துாங்கியுள்ளார்.
பணி முடிந்து வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அவரை போனில் தொடர்பு கொண்டுள்ளனர். போனை எடுக்காததால் அவரை தேடி சாத்தரன்கோட்டைக்கே சென்றனர்.
அங்கு பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ., விஜயகுமாரிடம் கேட்டபோது அவர் துாங்கிகொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார். கருப்பையாவை எழுப்பிய போது அவர் எழவில்லை.
108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அவரை பரிசோதித்தபோது அவர் இறந்தது தெரிய வந்தது.
