
சிவகங்கை: சிவகங்கை அருகே கீழக்கண்டனி ரேஷன் கடையில் வழங்கக்கூடிய ரேஷன் அரிசி துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை அருகேயுள்ள கீழக்கண்டனி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் கீழகண்டனி, மேலகண்டனி மேல வெள்ளஞ்சி உச்சிப்புள்ளி ஆலங்குளம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 516 குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர்.
இந்த கடையில் கடந்த இரண்டு மாதமாக வழங்கக்கூடிய அரிசி துர்நாற்றம் வீசுவதாகவும் சமைத்து சாப்பிட முடியாத சூழலில் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கீழக்கண்டனி துரைப்பாண்டி கூறுகையில், கடந்த இரண்டு மாதமாக ரேஷன் கடையில் வழங்கக்கூடிய அரிசி துர்நாற்றம் வீசுகிறது. இவற்றை சமைத்து சாப்பிட முடியவில்லை. ரேஷன் கடை ஊழியர்களிடம் கேட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும். என்ன அரிசி வருகிறதோ அதைத்தான் தருகிறோம் என்கின்றனர். மாவட்ட நிர்வாகம் எங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

