
இத்தாலுகாவில் சிங்கம்புணரி, எஸ்.புதுார் ஒன்றியங்களில் பரவலாக மழை பெய்ததை தொடர்ந்து விவசாயிகள் 2000க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளனர். 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் கடலை விதைத்துள்ளனர்.
நிலத்தை உழுவது தொடங்கி, விதை பாவுதல், நாற்று நடுதல், களை எடுத்தல் மற்றும் அறுவடை வரை கூலி ஆட்கள் கிடைப்பதில்லை.
விவசாய வேலை தெரிந்தவர்கள் அனைவரும் வேலை உறுதி திட்ட பணியில் சேர்ந்து விட்டதால் விவசாயப் பணிகளுக்கு வருவதில்லை. இதனால் விவசாயிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
சாகுபடி காலங்களில் பக்கத்தில் உள்ள வயல் உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து கூட்டாக விவசாய பணிகளை கவனித்து வருகின்றனர். ஆனாலும் முழு அளவில் பணிகளை செய்ய முடியாமல் பல விவசாய நிலங்கள் தரிசாக விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரப்பு வெட்டுதல், தென்னை மரங்களுக்கு வட்டப்பாத்தி கட்டுதல் உள்ளிட்ட சில வேலைகளுக்கு மத்திய அரசின் வேலை உறுதி திட்ட பணியாளர்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதி உள்ளது.
விவசாயம் சார்ந்த அனைத்து பணிகளுக்கும் அத்திட்ட பணியாளர்களை ஊராட்சி நிர்வாகம் சார்பில் அனுப்பி வைத்தால் விவசாயிகளின் சிரமம் குறைந்து விவசாய பணிகள் துரிதமாக நடக்கும். நிலங்கள் தரிசாக விடப்படுவதும் குறையும். எனவே நெல், கடலை, தென்னை, தோட்ட பயிர் சார்ந்த அனைத்து விவசாய பணிகளுக்கும் வேலை உறுதித் திட்ட பணியாளர்களை முன்னுரிமை அடிப்படையில் அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

