/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிள்ளையார்பட்டியில் நாளை தமிழ்ப்புத்தாண்டு வழிபாடு; காலையில் தீர்த்தவாரி
/
பிள்ளையார்பட்டியில் நாளை தமிழ்ப்புத்தாண்டு வழிபாடு; காலையில் தீர்த்தவாரி
பிள்ளையார்பட்டியில் நாளை தமிழ்ப்புத்தாண்டு வழிபாடு; காலையில் தீர்த்தவாரி
பிள்ளையார்பட்டியில் நாளை தமிழ்ப்புத்தாண்டு வழிபாடு; காலையில் தீர்த்தவாரி
ADDED : ஏப் 13, 2025 07:12 AM
திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் தமிழ்ப்புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு நாளை தீர்த்தவாரி நடைபெறும்.
குடைவரை கோயில்களில் பிரசித்தி பெற்ற, நகரத்தார் கோயிலான கற்பக விநாயகர் கோயிலில் விசுவாவசு தமிழ்ப்புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடக்கிறது.
அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, திருவனந்தால் அபிஷேகம், பூஜை முடிந்து மூலவர் தங்கக் கவசத்தில் அருள்பாலிப்பார். தொடர்ந்து உற்ஸவர் வெள்ளி மூஷிக வாகனத்தில் மூலவர் சன்னதி அருகில் எழுந்தருள்வார். அடுத்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம்.
காலை 9:00 மணிக்கு மேல் வெள்ளிப்பல்லக்கில் அங்குசத்தேவரும், அஸ்திரத்தேவரும் புறப்பாடாகி கோயில் குளப்படித்துறையில் எழுந்தருளுவர்.
தொடர்ந்து தலைமைக்குருக்கள் பிச்சை சிவாச்சாரியார் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க அபிஷேகம், தீபாராதனை நடைபெறும்.
பின்னர் கோயில் குளத்தில் சிவனின் பிரதிநிதியாக அஸ்திரத் தேவருக்கும், விநாயகரின் பிரதிநிதியாக அங்குசத்தேவருக்கும் சிவாச்சாரியாரால் தீர்த்தவாரி உற்ஸவம் நடைபெறும்.
மதியம் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கக் கவச அலங்காரம், தீபாராதனை நடைபெறும். இரவு 7:00 மணி அளவில் கற்பகவிநாயகர், மருதீசர் மூலவர் சன்னதி முன்பாக, ராசி விதான மண்டபத்தின் கீழ் உள்ள மேடையில் விசுவாவசு வருட பஞ்சாங்கம் சிவாச்சாரியாரால் வாசிக்கப்படும். ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி சித.பழனியப்பன், நச்சாந்துபட்டி மு.குமரப்பன் ஆகியோர் செய்கின்றனர்.