/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வழிகாட்டி இல்லாத குன்றக்குடி குடவரை கோயில்
/
வழிகாட்டி இல்லாத குன்றக்குடி குடவரை கோயில்
ADDED : பிப் 10, 2025 04:43 AM

திருப்புத்துார்: குன்றக்குடி குடவரைக் கோயிலுக்கு வரும் பார்வையாளர்களுக்கு தொல்லியல்துறை அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
மாவட்டத்தின் முதன்மையான முருக வழிபாட்டுத் தலமாக குன்றக்குடி உள்ளது. இங்குள்ள மலைக்குன்றின் மேலே உள்ள கோயிலுக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு செல்கின்றனர்.
மலையடிவாரத்தில் கீழைக் கோயில்கள்' எனப்படும் குடவரைக் கோயில்கள் உள்ளன. சண்டேஸ்வரர், மலைக்கொழுந்தீசர், அண்ணாமலையார், சுந்தரேஸ்வரர் என்று வரிசையாக ஒரே பாறையில் நான்கு குடவரைகள் உள்ளன. முற்காலப் பாண்டியர்களால் 1200 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இக்கோயில்களுக்குள் புடைப்பு சிற்பங்களாக சிவலிங்கம் கருவறைக்குள் உள்ளது. வெளியே முக மண்டபத்தில் திருமால்,கருடன், ஆடல்வல்லான்,வலம்புரி விநாயகர், சேத்ர பாலர்கள் ஆகியோருக்கு அழகிய புடைப்புச் சிற்பங்கள் உள்ளன.
இதில் வலம்புரி விநாயகரின் நெற்றியில் சிவலிங்கம் வடிக்கப்பட்டுள்ளது. விநாயகரின் கையிலும் சிவலிங்கம் உள்ளது.மலைக்கொழுந்தீசர் குடவரையில் உள்ள புடைப்புச் சிற்பங்களுக்கு சுதை வடிவிலான அமைப்பில் பல வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன. இந்த குடவரை முழுவதுமாக பாதுகாக்கப்படுகிறது. பணியாளர் இருந்தால் மட்டுமே திறக்கப்படும். இல்லாவிட்டால் பூட்டியே இருக்கும்.
குடவரை கோயில்களுக்கு முன்பாக உள்ள இசைத் துாண்கள்,அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கல்மண்டபம் பாதுகாப்பின்றி உள்ளது. ஜமீன் வெங்கலப்பநாயக்கரால் 17 ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. இங்கு பல புராதன சிற்பங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. குடவரைகளில் வட்டெழுத்துகள், சிந்து வெளி முத்திரைகளுடன் கூடிய தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் உள்ளன.
இங்கு வரும் பார்வையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் அறிவிப்பு பலகைகள் ஏதுமில்லை. விளக்கம் தரும் பணியாளர்களும் இல்லை. இதற்கான பணியாளர் எப்போது வருவார் என்பதை அறிவிக்கும் தகவல் பலகை கூட இல்லை. மற்ற தொல்லியல் சின்ன வளாகங்களில் உள்ள அடிப்படை வசதிகளான ஒலி, ஒளி அமைப்பு,புல்வெளிகள், பூங்கா, கற்கள் பதிக்கப்பட்ட தளங்கள் இங்கு இல்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பழமை மாறாமல் குடவரைகளில் மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இதுவரை நிறைவேற்றப்படவில்லை. வரலாற்றை மக்களிடம் சேர்க்கும் தொல்லியல் சின்னமான இந்த குடவரை வளாகம் மேம்படுத்தப்பட்டு, பார்வையாளர்களுக்கு தகவல் தரும் நிரந்தரப் பணியாளர் நியமிக்கவும் தொல்லியல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

