/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடிக்கு கானல் நீரான விமான நிலையம்
/
காரைக்குடிக்கு கானல் நீரான விமான நிலையம்
ADDED : பிப் 23, 2024 05:17 AM
காரைக்குடி : காரைக்குடி அருகே செட்டிநாட்டில் விமான நிலையம், விமான பயிற்சி நிலையம் அமையுமா என்ற எதிர்பார்ப்பு வெறும் கானல் நீராகவே இருப்பதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.
செட்டிநாட்டில் கால்நடை பண்ணை ஆயிரத்து 907 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த பண்ணையில் 2வது உலகப் போரின் போது அமைக்கப்பட்ட இரண்டு விமான ஓடுதளங்கள் அமைந்துள்ளன. பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, கானாடுகாத்தான் அமைந்துள்ள முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கக்கூடிய காரைக்குடி பகுதிக்கு வெளி மாநிலத்தினரும் வெளிநாட்டினரும் வந்து செல்கின்றனர். காரைக்குடி பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் வேலைக்காகவும் தொழில் நிமித்தமாகவும் வெளிநாடுகளுக்கு விமானம் மூலம் சென்று வருகின்றனர். தவிர மத்திய தொழிற்படை, மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் அமைந்துள்ளதால் விஞ்ஞானிகள், மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள், மத்திய அரசில் பதவி வகிப்பவர்கள் வந்து செல்கின்றனர். செட்டிநாடு பலகார வகைகள், கண்டாங்கி சேலைகள், ஆத்தங்குடி டைல்ஸ் வெளிநாடு, வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதியாகிறது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்தோரும் சினிமா படப்பிடிப்பிற்காக காரைக்குடி பகுதிக்கு வந்து செல்கின்றனர். இவ்வாறான காரைக்குடி பகுதியில் விமான நிலையம் அமைக்க சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
விமான நிலையம் அமைந்தால் தொழில் துறை நிறுவனங்கள், ஐடி., நிறுவனங்கள் உட்பட இப்பகுதியில் தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் ஏராளமானோர் வேலை வாய்ப்பு பெறுவதோடு வணிகம் மற்றும் போக்குவரத்து சம்பந்தமான தொழில்களும் பெருமளவில் உயரும் என்று எதிர்பார்ப்பு நிலவியது.
கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் 50 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதில் செட்டிநாடு விமான நிலையமும் இடம்பெறும் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.
மேலும், கடந்த ஜூனில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சகத்தினர் விமானிகளுக்கான பயிற்சி கழகம் அமைக்கும் பணிக்கான செட்டிநாடு கால்நடை பண்ணையில் ஆய்வு மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், விமானிகளுக்கான பயிற்சி கழகம் அமைத்திட கானாடுகாத்தான்,கொத்தரி, பள்ளத்துார், கொத்தமங்கலத்தில் உள்ள 164.01 ஏக்கர் நிலம் உரிமை மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், இதற்கான உத்தரவை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக அதிகாரிகள் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்ததாகவும் தகவல் வெளியானது.
ஆனால், அதுவும் கிணற்றில் போட்ட கல் போல் கிடக்கிறது. விரைவில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.