/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
பஸ் ஸ்டாண்டை ஒரு ரவுண்டு அடித்துவிட்டு மானாமதுரை வந்ததாக கூறிய 'மப்பு' டிரைவர்
/
பஸ் ஸ்டாண்டை ஒரு ரவுண்டு அடித்துவிட்டு மானாமதுரை வந்ததாக கூறிய 'மப்பு' டிரைவர்
பஸ் ஸ்டாண்டை ஒரு ரவுண்டு அடித்துவிட்டு மானாமதுரை வந்ததாக கூறிய 'மப்பு' டிரைவர்
பஸ் ஸ்டாண்டை ஒரு ரவுண்டு அடித்துவிட்டு மானாமதுரை வந்ததாக கூறிய 'மப்பு' டிரைவர்
ADDED : ஜூன் 17, 2025 12:55 AM

திருப்புத்துார்; போதையில் பயணியர் பஸ்சை இயக்கி, டிரைவர்கள் பிடிபடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
போதையில், டவுன் பஸ் டிரைவர் ஸ்டியரிங் மீது படுத்து மட்டையானது முதல் ஆம்னி பஸ் டிரைவர் தாறுமாறாக பஸ்சை ஓட்டி, போலீசுக்கு பயணியர் தகவல் கொடுத்து, வழிமறித்து நிறுத்தி அபராதம் விதித்தது வரை, பல்வேறு சம்பவங்கள் சில வாரங்களில் நடந்துள்ளன.
இதை எல்லாம் மிஞ்சும் வகையில், சிவகங்கை மாவட்டம், திருப்புத்துாரில், அரசு பஸ் டிரைவர் போதையில் கொடுத்த அலப்பறை, பயணியரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
திருப்புத்துாரில், நேற்று முன்தினம் இரவு 8:20 மணிக்கு சிவகங்கை வழியாக மானாமதுரைக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இதில், 30 பயணியர் இருந்தனர். திருப்புத்துார் பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியேறிய பஸ், மானாமதுரை செல்லும் ரோட்டிற்கு திரும்பாமல், பஸ் ஸ்டாண்டை ஒரு ரவுண்டு சுற்றி, மீண்டும் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து நின்றது.
பதறிப்போன பயணியர், டிரைவர் மனோகரிடம் சென்று கேட்ட போது, 'மானாமதுரை வந்துவிட்டது. இறங்கிச் செல்லுங்கள்' என, போதையில் உளறியுள்ளார். அதன் பிறகு தான், டிரைவர் போதையில் இருந்ததே பயணியருக்கு தெரிந்தது.
'நல்ல வேளையாக, போதையில் பஸ்சை ஓட்டி எங்காவது கவிழ்த்துவிடாமல், பஸ் ஸ்டாண்டை சுற்றி வந்து நிறுத்தினாரே புண்ணியவான்...' என, உயிர் தப்பியதை நினைத்து பெருமூச்சு விட்டபடி, பயணியர் வேகமாக பஸ்சில் இருந்து கீழே இறங்கினர்.
இதைப்பார்த்த கண்டக்டர், டிரைவரிடம் கீழே இறங்குமாறு கூறியும், மனோகர் இறங்க மறுத்தார். சிறிது நேரத்தில் பயணியர் யாரும் இல்லாமல் காலியாக இருந்த பஸ்சை, டிரைவர் மனோகர் வம்படியாக பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியே ஓட்டி வந்து மதுரை ரோட்டில் நிறுத்தினார்.
மற்றொரு அரசு பஸ் டிரைவர், மனோகரிடம் பேசி, பஸ்சை மீண்டும் பஸ் ஸ்டாண்டிற்குள் ஓட்டி வந்தார். மாற்று டிரைவர் வரவழைக்கப்பட்டு பஸ்சை மீண்டும் இயக்க முயன்ற போது, டிரைவர் சீட்டில் மனோகர் அமர்ந்து கொண்டு, தானே மானாமதுரைக்கு ஓட்டிச்செல்வதாக கூறி இறங்க மறுத்தார்.
தகவலறிந்து வந்த போலீசார், மனோகரன் மது அருந்தியதை, 'ப்ரீத் அனலைசர்' கருவி வாயிலாக உறுதிப்படுத்தினர். அதன்பின், மனோகர் கட்டாயமாக கீழே இறக்கப்பட்டார். மாற்று டிரைவர், பயணியருடன் பஸ்சை மானாமதுரைக்கு ஓட்டிச் சென்றார்.
இந்த களேபரத்தால், பயணியர் ஒரு மணிநேரம் அவதிக்குள்ளாகினர். டிரைவர் மனோகரன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். அவர், இதற்கு முன்பும் சரியாக பணி செய்யாததால் இடமாற்றத்திற்கு உள்ளானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.