/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் குப்பைக்கு தீர்வு என்ன : அலட்சியப்படுத்தும் மாவட்ட நிர்வாகம்
/
திருப்புவனத்தில் குப்பைக்கு தீர்வு என்ன : அலட்சியப்படுத்தும் மாவட்ட நிர்வாகம்
திருப்புவனத்தில் குப்பைக்கு தீர்வு என்ன : அலட்சியப்படுத்தும் மாவட்ட நிர்வாகம்
திருப்புவனத்தில் குப்பைக்கு தீர்வு என்ன : அலட்சியப்படுத்தும் மாவட்ட நிர்வாகம்
ADDED : நவ 11, 2025 11:54 PM
திருப்புவனம்: திருப்புவனத்தில் சேகரிக்கப்படும் குப்பையை அழிக்க எந்த மாற்று ஏற்பாடுகளும் செய்யப்படாததால் நீர் நிலைகளில் கொட்டுகின்றனர்.
திருப்புவனத்தில் 18 வார்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். எட்டாயிரம் வீடுகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. திருமண மண்டபங்கள், வங்கிகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், கோயில்கள் உள்ளிட்டவற்றில் இருந்தும் தினசரி குப்பையை பேரூராட்சி நிர்வாகம் சேகரிக்கிறது.
தினசரி குப்பையை சேகரிக்க மூன்று வேன்கள், ஒரு டிராக்டர், 16 பேட்டரி வாகனங்கள் உள்ளன. பேரூராட்சி சார்பில் ஒரு துப்புரவு ஆய்வாளர், ஒரு மேஸ்திரி, 23 நிரந்தர, 80 தற்காலிக துாய்மைப் பணியாளர்கள் உள்ளனர்.
திருப்புவனத்தில் தினசரி நான்கு முதல் 5 டன் குப்பை சேகரிக்கப்படுகின்றன. திருமணம் மற்றும் விழாக்காலங்களில் இரு மடங்கு குப்பை சேகரிக்கப்படுகின்றன. இவற்றை நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோடு, வைகை ஆறு, நீர் வரத்து வாய்க்கால்கள் உள்ளிட்டவற்றில் கொட்டி தீ வைத்து அழிக்கின்றனர். குப்பையை தரம் பிரிக்காமல் பிளாஸ்டிக் கேரி பைகள், அழுகிய பழங்கள், தோல், சணல் பொருட்கள் என அனைத்தையும் ஒன்றாக சேர்த்து தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் சாலையில் அடர்ந்து புகை மூட்டம் எழும்பி போக்குவரத்தும் பாதிக்கப் படுகிறது.
குப்பைகளுக்கு தீ வைத்து அழிக்காமல் தரம் பிரிக்க பல்வேறு திட்டங்கள் உருவாக்கியும் அதனை செயல்படுத்த அதிகாரிகள் ஆர்வம் காட்டாததால் எரிப்பது தொடர்கிறது. மாவட்ட நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுப்பத்தில்லை. சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்துார், சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பையை குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை லாரிகளில் ஏற்றப்பட்டு அரியலுார் சிமென்ட் ஆலைக்கு அனுப்படுகின்றன.
இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவதில்லை. திருப்புவனத்திலும் குப்பையை சேகரித்து தரம் பிரித்து அரியலுார் அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும் . மாவட்டத்தில் வைகை ஆற்றுப்பாசனத்தை நம்பியே விவசாயம் உள்ளது. மேலும் வைகை ஆற்று கூட்டு குடிநீர் திட்டம் மூலம் மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்கள் பயன்பெறுகின்றன. குப்பை கொட்டுவதால் அவை மாசுபடுகின்றன. குப்பையை அரியலுார் அனுப்புவதன் மூலம் வைகை ஆற்றையும் பாதுகாக்க முடியும்.

