ADDED : ஆக 04, 2025 04:12 AM

காரைக்குடி: காரைக்குடியில் உள்ள சாணங்காளி அம்மன் கோயில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பக்தர்கள் நேற்று தீச்சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காரைக்குடி மெய்யப்பன் அம்பலம் தெருவில் உள்ள சாணங்களி அம்மன் கோயில் 32 வது ஆண்டு ஆடிப்பெருக்கு விழா கடந்த ஜூலை 26 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
நேற்று, பக்தர்கள் முத்தாலம்மன் கோயிலில் இருந்து கோயில்கரகம், மதுக்குடம், முளைப்பாரி எடுத்து முக்கிய வீதி வழியாக கோயிலை வந்தடைந்தனர். ஆடிப்பெருக்கான நேற்று பக்தர்கள் பால் குடம், அக்னிச் சட்டி, வேல்காவடி, பறவைக் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தாலி கயிறு மாற்றி வழிபாடு காரைக்குடி பகுதியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஏராளமான பெண்கள் மஞ்சள் கயிறு கட்டி தெப்பத்தில் வழிபாடு செய்தனர்.
ஆடி மாதத்தின் முக்கிய நாளாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கு அன்று, மக்கள் சுப காரியங்களை தொடங்குவார்கள். நீரின்றி அமையாது உலகு என்பதை அறிந்து பெருக்கெடுத்து வரும் நீரை போற்றி வணங்கும் நாளாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் நீர்நிலைகள் பெருக வேண்டும் என்றும், தண்ணீர் மற்றும் உணவு பஞ்சம் ஏற்படாமல் இருக்க நதிக்கரைகளில் மக்கள் வழிபாடு செய்வர்.
ஆடிப்பெருக்கு அன்று ஆற்றங்கரை மற்றும் தெப்பங்களில் மக்கள் ஒன்று கூடி மஞ்சளில் பிள்ளையார் செய்து தேங்காய் பழம் வைத்து வழிபாடு செய்வர். பெண்கள் தாலி கயிறு மாற்றி கொள்வார்கள். இதற்காக நேற்று காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயில் தெப்பக்குளத்தில் பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
பணிகளை துவக்கிய விவசாயிகள் இளையான்குடி: இளையான்குடி, மானாமதுரை பகுதியில் ஆடி 18ம் பெருக்கான நேற்று ஏராளமான விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தங்களது விவசாய பணிகளை துவக்கினர்.
இளையான்குடி,மானாமதுரை சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கடந்த 2 வாரத்திற்கு மேலாக கடுமையான வெயில் அடித்து வருவதினால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர்.
கடந்த 3 நாட்களாக இப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக நீர் நிலைகளிலும் விவசாய நிலங்களிலும் தண்ணீர் தேங்க துவங்கியது. நேற்று ஆடி 18ம் பெருக்கு விழாவை முன்னிட்டு ஏராளமான விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தங்களது விவசாய பணிகளை ஆர்வமாக துவங்கினர்.
இது குறித்து இளையான்குடி விவசாயிகள் கூறியதாவது,
ஆடிப்பட்டத்தன்று வயல்வெளிகளில் விவசாய பணிகளை துவக்கினால் அந்த வருடம் விவசாயம் நல்ல முறையில் நடைபெறும் என்பதால் அன்றைய தினம் விவசாய பணிகளை துவங்குவது வழக்கமாக இருந்து வருகிறது.
ஆனால் கடந்த 2 வாரங்களாக இப்பகுதியில் கடுமையான வெயில் அடித்து வந்ததினால் நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்ததால் மிகுந்த அவதிப்பட்டு வந்தோம்.
ஆனால் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக இப்பகுதியில் தொடர் மழை பெய்ததால், உழவு பணிகளை துவக்கியுள்ளோம், என்றனர்.