/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அவலம்: அரசு மருத்துவமனைகளில் மிகக் குறைவான அளவில் டாக்டர்கள் உள்ளனர்
/
அவலம்: அரசு மருத்துவமனைகளில் மிகக் குறைவான அளவில் டாக்டர்கள் உள்ளனர்
அவலம்: அரசு மருத்துவமனைகளில் மிகக் குறைவான அளவில் டாக்டர்கள் உள்ளனர்
அவலம்: அரசு மருத்துவமனைகளில் மிகக் குறைவான அளவில் டாக்டர்கள் உள்ளனர்
ADDED : நவ 22, 2024 04:13 AM
சிவகங்கை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் 445 கிராம ஊராட்சிகள் உள்ளன. மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனையானது காரைக்குடியில் செயல்படுகிறது.
தவிர சிவகங்கை, தேவகோட்டை, திருப்புத்தூர், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, காளையார்கோயில், பூலாங்குறிச்சி, பள்ளத்துார், கொத்தமங்கலம், பாகனேரி, பலவான்குடி, உட்பட 17 அரசு மருத்துவமனைகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை செயல்படுகிறது. சோமநாதபுரத்தில் டி.பி., சானிடோரியம் மருத்துவமனை செயல்படுகிறது.
பாதிக்கும் குறைவான
டாக்டர்கள் :
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 18 அரசு மருத்துவமனைகளில் 117 டாக்டர்கள் இருக்க வேண்டிய நிலையில் மிகக் குறைவான அளவில் டாக்டர்கள் உள்ளனர்.
காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 24 டாக்டர்கள் இருக்க வேண்டிய நிலையில் 17 பேர் மட்டுமே உள்ளனர். 7 பணியிடம் காலியாக உள்ளது. மகப்பேறு டாக்டர் ஒருவர் மட்டுமே உள்ளார். அவரும் கான்ட்ராக்ட் மூலம் பணியமர்த்தப்பட்டுள்ளார். இதேபோல் மாவட்டத்தில் 117 டாக்டர்கள் இருக்க நிலையில் 55 டாக்டர் பணியிடங்கள் காலியாக கிடக்கிறது.
மகப்பேறு டாக்டர்கள்
பற்றாக்குறை:
சிவகங்கை மாவட்டத்தில் ஆண்டுதோறும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெறுகிறது. இதில் சுகப்பிரசவத்தை விட அறுவை சிகிச்சை மூலமே அதிக குழந்தைகள் பிறக்கிறது.
குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைத்திடும் வகையில் அரசு பல்வேறு வழிமுறைகளை செயல்படுத்தி வருகிறது. ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் போதிய மகப்பேறு டாக்டர்கள் இல்லை. மாவட்டத்தில் 12 மகப்பேறு டாக்டர்கள் இருக்க வேண்டிய நிலையில் 2 மகப்பேறு டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். இதனால், பிரசவத்திற்கு செல்லும் கர்ப்பிணிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும் சூழல் நிலவினால் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் அவலம் நிலவுகிறது.
நீண்ட துாரம் செல்வதற்கு அச்சமடைந்து பிரசவத்திற்கு வரும் பெண்கள் தனியார் மருத்துவமனையை தேடிச் செல்லும் நிலை உருவாகி உள்ளது. தனியார் மருத்துவமனை சென்றால் அதிகம் செலவாகும் என்றாலும் வேறு வழியின்றி ஏழை எளிய மக்கள், தாய் சேய்களை காத்திட தனியார் மருத்துவமனைக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது.
பணியிடம் மாறிச் செல்லும் மருத்துவர்கள்:
மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் போதிய டாக்டர்கள் இல்லாததால் டாக்டர்கள் பிற மருத்துவமனைகளுக்கு வேற்றுப்பணிக்கு அனுப்பப்படுகின்றனர்.
தாங்கள் பணி செய்யும் இடத்திலிருந்து மாவட்டத்தின் கடைக்கோடிக்கு சென்று வரும் சூழல் நிலவுவதால் டாக்டர்கள் பலரும் வேற்றுப்பணி செய்வதில் சிக்கல் நிலவுகிறது. இதனால் டாக்டர்கள் பலரும் பணியிட மாறுதல் கேட்டு வரிசை கட்டி நிற்கும் நிலை உருவாகியுள்ளது.
எனவே சிவகங்கை மாவட்டத்தில் மகப்பேறு டாக்டர் உட்பட அனைத்து காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.