/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துார் சந்தையில் நிழற்கூரை இல்லாமல் தவிப்பு
/
திருப்புத்துார் சந்தையில் நிழற்கூரை இல்லாமல் தவிப்பு
திருப்புத்துார் சந்தையில் நிழற்கூரை இல்லாமல் தவிப்பு
திருப்புத்துார் சந்தையில் நிழற்கூரை இல்லாமல் தவிப்பு
ADDED : பிப் 18, 2025 05:09 AM

திருப்புத்துார்: திருப்புத்துார் வாரச்சந்தையில் நிழற்கூரை வசதியின்றி பொதுமக்களும், கடையில் இடப்பற்றாக்குறையால் வியாபாரிகளும் தவிக்கின்றனர்.
திருப்புத்துார்-காரைக்குடி ரோட்டில் வாரச்சந்தை சனிக்கிழமை நடைபெறுகிறது. முன்பு மரங்களுடன் இருந்த வளாகம் சில ஆண்டுகளுக்கு முன் புனரமைக்கப்பட்டு தற்போது 120 கடைகள் உள்ள கட்டடத்தொகுப்பாக மட்டும் உள்ளது. பொதுமக்களுக்கான நிழற்கூரை இல்லை.
வெயிலுக்கு பயந்து பொதுமக்கள் பகலில் வருவதைத் தவிர்த்து மாலையில் அதிகமாக வருகின்றனர். மேலும் கடைகள் குறுகியதாக உள்ளதால் வியாபாரிகள் தரையில் அமர்ந்து நடைபாதையில் வியாபாரம் செய்ய வேண்டியுள்ளது.
கடைசியில் 3 வரிசையில் உள்ள 36 கடைகள்பயன்படுத்தப்படா மலேயே உள்ளன.
வியாபாரி கூறுகையில், 'இரு கடைகளை ஒரு கடையாக மாற்றினால் வசதியாக காய்கறிகளை பரப்பி விற்கலாம். பொதுமக்களுக்கு நிழலுக்காக பாலிதீன் ஷீட் கூரையாக கட்ட வேண்டியுள்ளது. கடைகளுக்கு இடையில் நிழற்கூரை ஏற்படுத்தினால் நல்லது. மழைக்கும் பாதுகாப்பாக இருக்கும். குடிநீர் வசதி இல்லை. கழிப்பறைக்கு செல்லும் வழி சுகாதாரக்கேடாக உள்ளதால் யாரும் பயன்படுத்த முடியவில்லை என்றார்.
சந்தை வளாகத்திலேயே ஆடு அடிக்கும் கூடம் உள்ளது. மிகவும் சேதமடைந்துள்ள இக்கட்டடத்தை வேறிடத்தில் நவீனப்படுத்த வியாபாரிகள் கோரியும் இதுவரை நடவடிக்கை இல்லை. மேலும் சந்தைக்கு வெளியே உள்ள ரோட்டிலும் நடைபாதையில் வியாபாரிகள் அதிகமாக காணப்படுகின்றனர். அவர்களையும் சந்தை வளாகத்தினுள் அனுமதிக்கலாம்.
பேரூராட்சி தரப்பில் கூறுகையில், வாரச்சந்தையில் நிழற்கூரை அமைக்கபரிசீலிக்கப்படும். கழிப்பறை செல்லும் பாதை சீரமைக்கப்படும். ஆடு அடிக்கும் கட்டடம் வேறிடத்தில் ரூ 35 லட்சத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்டில் நிழற்கூரை அமைக்க முதற்கட்டமாக ரூ.15 லட்சம் அனுமதியாகியுள்ளது என்றனர்.