/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாலையில் திரிந்த மாட்டை ஏலம் விட்ட பேரூராட்சி
/
சாலையில் திரிந்த மாட்டை ஏலம் விட்ட பேரூராட்சி
ADDED : டிச 06, 2024 05:33 AM
திருப்புத்துார்: திருப்புத்துாரில் ரோட்டில் திரிந்த மாடு பேரூராட்சியால் பிடிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது.
திருப்புத்துார் நகரில் முக்கிய ரோடுகளில் பகலில் மாடுகள் நடமாடுவதும், இரவில் கூட்டம், கூட்டமாக ஓய்வெடுப்பதும் நீண்ட காலமாக உள்ளது. இதனால் பல சாலை விபத்துக்கள் நடந்து விட்டன. கால்நடைகளை வெளியே விட தடை இருந்தும் மாட்டின் உரிமையாளர்கள் அதை கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக பேரூராட்சி நிர்வாகத்தினர் திருப்புத்தூர் அண்ணாத்துரை சிலை, நான்கு ரோடு, சிங்கம்புணரி ரோடு,அச்சுக்கட்டு பகுதியில் சாலையில் திரிந்த மாடுகளை பிடித்தனர். ஒரு காளை,11 பசு மாடுகள் இவ்வாறு பிடிக்கப்பட்டன.
பேரூராட்சி உரக்கிடங்கில் வைத்து மாடுகள் பராமரிக்கப்பட்டது. உரிமையாளர்கள் அபராதம் செலுத்தி மாடுகளை மீட்க அறிவிக்கப்பட்டது.ஒரு மாட்டிற்கு ரூ 2 ஆயிரம் அபராதம் மற்றும் பராமரிப்பு கட்டணம் ரூ.1000 செலுத்தி 11 மாடுகளை உரிமையாளர்கள் அழைத்து சென்றனர். மீதமிருந்த ஒரு பசு மாடு மட்டும் ரூ 11 ஆயிரத்து 500க்கு நேற்று ஏலம் போனது.
இந்நிலையில், இரண்டாவது முறையாக பிடிபடும் மாடுகளுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் மற்றும் பராமரிப்பு கட்டணம் ரூ.1000 செலுத்த வேண்டும் என்றும், மூன்றாம் முறை சிக்கினால் நேரடியாக ஏலம் விடப்படும் என்று பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.