/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
உருளி கிராமத்திற்கு பஸ் வசதி இல்லை
/
உருளி கிராமத்திற்கு பஸ் வசதி இல்லை
ADDED : ஜன 29, 2025 07:41 AM

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் உருளி கிராமத்திற்கு பஸ் வசதி இல்லாததால் உருளி விலக்கிலிருந்து 2 கிலோ மீட்டர் யூக்கலிப்டஸ் மரங்கள் அடர்ந்த காட்டு பகுதி வழி நடந்து செல்லும் நிலை உள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது உருளி கிராமம். இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஒரு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்த மாணவர்கள் மேல் படிப்பிற்கு சிவகங்கை, மானாமதுரையில் உள்ள பள்ளி கல்லுாரிகளுக்கு தான் செல்ல வேண்டும்.
தற்போது 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிவகங்கை, மானாமதுரையில் உள்ள பள்ளி கல்லுாரிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் தினசரி கிராமத்தில் இருந்து 2 கிலோமீட்டர் யூக்கலிப்டஸ் மரங்கள் அடர்ந்த காட்டு பகுதி வழியாக செல்லக்கூடிய ரோட்டில் நடந்து சென்று சிவகங்கை மானாமதுரை நெடுஞ்சாலையில் பஸ்சை பிடித்து தங்களது பள்ளி கல்லுாரிக்கு செல்ல வேண்டும்.
மாலை நேரங்களில் பள்ளி கல்லுாரிகளில் சிறப்பு வகுப்பு நடந்தால் இரவில் மாணவிகள் தனியாக விலக்கு ரோட்டில் இறங்கி கிராமத்திற்கு செல்ல அச்சப்படுகின்றனர். இதனாலயே சில பெண்கள் இந்த கிராமங்களில் இருந்து மேற்படிப்பு படிப்பதில் சிரமம் இருப்பதாக தெரிவிக்கின்றனர். அதேபோல் உருளி பள்ளியில் பணியாற்றகூடிய பெண் ஆசிரியர்களும் விலக்கு ரோட்டில் இறங்கி தான் நடந்து பள்ளிக்கு செல்ல வேண்டும்.
கடந்த ஆண்டுகளில் காலை மாலை நேரங்களில் மானாமதுரை செல்லக்கூடிய டவுன் பஸ்கள் உருளி கிராமத்திற்குள் சென்று திரும்பியுள்ளது. இதனால் இந்த கிராம மக்கள் பயன் அடைந்துள்ளனர். தற்போது கடந்த சில ஆண்டுகளாக இந்த கிராமத்திற்குள் எந்த டவுன் பஸ்சும் செல்வதில்லை. ஆகையால் மாணவர்களின் நலன் கருதி காலை மாலை நேரங்களில் சிவகங்கையில் இருந்து மானாமதுரைக்கும், மானாமதுரையில் இருந்து சிவகங்கைக்கும் செல்லக்கூடிய டவுன் பஸ்கள் உருளி கிராமத்திற்குள் சென்று வந்தால் பள்ளி கல்லுாரி செல்லக்கூடிய மாணவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என அந்தபகுதி மாணவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

