ADDED : அக் 29, 2024 05:18 AM

திருப்புவனம்: திருப்புவனம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பலரும் வாகனங்களை நிறுத்துவதால் ஆம்புலன்ஸ் செல்ல கூட பாதையின்றி நோயாளிகளை துாக்கி செல்ல வேண்டியுள்ளது.
திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு அல்லிநகரம், தட்டான்குளம், லாடனேந்தல், மடப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினசரி 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.உள் நோயாளிகளாக 75க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.
மருத்துவமனை வளாகத்தில் மகப்பேறு சிகிச்சைக்காக கூடுதல் கட்டடம் கட்டும் பணியும் நடந்து வருகிறது. அரசு மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத்துறைக்கு சம்பந்தமில்லாத பலரும் தங்களது கார், வேன், டூவீலர் உள்ளிட்டவைகளை நிறுத்திவருகின்றனர்.
அவசர காலங்களில் நோயாளிகளை ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களை அழைத்து வர முடியவில்லை. ஒருபுறம் கட்டட பணி மறுபுறம் வாகனங்கள் இவற்றிற்கு இடையில் நோயாளிகளை அழைத்து வருவது சிரமமாக உள்ளது.
பலமுறை வெளிநபர்கள்வாகனங்களை நிறுத்த கூடாது என எச்சரித்தும் வரிசையாக கார், வேன்களை நிறுத்தி வைத்துள்ளனர். அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவ பிரிவும் செயல்படுகிறது. வாகனங்களை நிறுத்தி இருப்பதால் அதனை கடந்து சித்த மருத்துவ பிரிவிற்கு செல்ல முடியவில்லை.
மருத்துவமனை ஊழியர்கள் கூறுகையில், டாக்டர்கள் மூன்று பேர் மட்டுமே காரில் வந்து செல்கின்றனர். ஆனால் வளாகத்தினுள் 10க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மாவட்ட சுகாதார துறையினர் மருத்துவமனை வளாகத்தில் வெளி நபர் வாகனங்களை நிறுத்தி பார்க்கிங்காக மாற்றுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.