ADDED : ஜன 21, 2026 05:41 AM

திருப்புத்துார்: திருப்புத்துார் கோட்டைக் கருப்பண்ணசுவாமி கோயில் முன் மண்டபத்தில் இருந்த உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது.
திருப்புத்துார் நகரில் காரைக்குடி - -திண்டுக்கல் ரோடு சந்திப்பில் கோட்டைக்கருப்பர் கோயில் உள்ளது. நேற்று காலை மண்டபத்தை திறந்து உள்ளே சென்ற போது அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, ஓடுகள் பிரிக்கப்பட்டிருந்ததும் தெரிந்தது.
கோயில் நிர்வாகிகள் உள்ளே இருந்த கேமராவில் பதிவானதைப் பார்த்த போது முன்மண்டபத்தினுள் நுழைந்த நபர் தலையில் குல்லா அணிந்து உண்டியல் பூட்டை இரும்புக்கம்பியால் உடைத்து உண்டியலை திறப்பதும்,வேட்டியில் நாணயம்,ரூபாயை கொட்டி எடுத்துச் செல்வதும் தெரியவந்தது. அறங்காவலர் வயிரவன் புகாரின் பேரில் திருப்புத்தூர் போலீசார் விசாரித்தனர்.
இக்கோயிலில் தற்போது மூன்றாவது முறையாக உண்டியல் திருட்டு நடந்துள்ளது. இதற்கு முன்பாக இக்கோயிலில் நடந்த 2 திருட்டுச்சம்பவங்களிலும் குற்றவாளிகள் கைதாகவில்லை. இந்நிலையில் மீண்டும் 3வது முறையாக திருட்டு நடந்தது பக்தர்களிடையே வருத்தத்தைத் தந்துள்ளது.
