/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தீரவில்லை தரம் உயர்த்தப்பட்டு 17 ஆண்டுகளாகியும் பிரச்னை திருக்கோஷ்டியூர் அரசு பள்ளி அவலம் தொடர்கிறது
/
தீரவில்லை தரம் உயர்த்தப்பட்டு 17 ஆண்டுகளாகியும் பிரச்னை திருக்கோஷ்டியூர் அரசு பள்ளி அவலம் தொடர்கிறது
தீரவில்லை தரம் உயர்த்தப்பட்டு 17 ஆண்டுகளாகியும் பிரச்னை திருக்கோஷ்டியூர் அரசு பள்ளி அவலம் தொடர்கிறது
தீரவில்லை தரம் உயர்த்தப்பட்டு 17 ஆண்டுகளாகியும் பிரச்னை திருக்கோஷ்டியூர் அரசு பள்ளி அவலம் தொடர்கிறது
ADDED : நவ 07, 2024 01:31 AM
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டு 17 ஆண்டுகளாகியும் கூடுதல் வகுப்பறை, ஆய்வகம் வசதியின்றி மாணவ, மாணவியர் தவிக்கின்றனர்.
இப்பள்ளியில் தற்போது 500க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படிக்கின்றனர். மொத்தமே 35 சென்ட் இடத்தில் 50 ஆண்டுகளான இரு கட்டடத்தில் 9 வகுப்பறைகள் மட்டும் உள்ளது. 13 வகுப்புகளுக்கு 9 வகுப்பறை என்பதால் பல வகுப்புகள் மரத்தடியிலேயே நடக்கிறது. தற்காலிக ெஷட் அமைத்து சமாளிக்கின்றனர். வெயில் காலத்தில் வெப்பத்தாலும், மழை என்றால் தண்ணீர் நிற்பதாலும் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
கடந்த 2008 ல் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 17 ஆண்டுகளாகியும் இடப்பற்றாக்குறையால் கூடுதல் வகுப்பறை கட்ட முடியாத நிலை உள்ளது. வகுப்பறை மட்டுமின்றி அறிவியல் ஆய்வகமும் எதுவுமின்றி மேல்நிலை வகுப்புகள் நடத்தப்படுகிறது. அத்துடன், விளையாட்டு மைதானம், போதிய கழிப்பறை வசதியின்றி மாணவ,மாணவியர் தவிக்கின்றனர். 200க்கும் மேற்பட்ட மாணவியருக்கு உள்ள சிறிய கழிப்பறையும் இடியும் நிலையில் உள்ளது.
இதனால் கூடுதல் இடத்தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது. தேவஸ்தான இடம் மற்றும் கைவிடப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி ஆகியவை குறித்து பேசப்பட்டது. பின்னர் பயன்பாட்டில் இல்லாத பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி இடத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டது. அதில் இருந்த பாழடைந்த கட்டடங்கள் அகற்றப்பட்டு தற்போது 50 சென்ட் இடம் காலியாக உள்ளது. அந்த காலியிடத்தை பள்ளிக்கு மாற்ற வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட இடத்தை பள்ளிக்கு வழங்க ஆட்சேபமில்லா சான்றை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இதுவரை வழங்கவில்லை. இதனால் இடத்தை பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்ற முடியவில்லை.
இதனால் பள்ளிக்கு நபார்டு நிதியுதவியுடன் புதிய கட்டடம், அறிவியல் ஆய்வகம், கழிப்பறை, சைக்கிள் நிறுத்தகம்,விளையாட்டு மைதானம் வசதி கிடைப்பது தாமதமாகிறது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இடத்தை பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்றி புதிய இடத்தில் பள்ளி இயங்க பெற்றோர்கள் கோரியுள்ளனர்.