/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வியாபாரிகளிடம் சிக்கிய திருப்புவனம் விவசாயிகள்
/
வியாபாரிகளிடம் சிக்கிய திருப்புவனம் விவசாயிகள்
ADDED : ஜன 19, 2025 05:03 AM
திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் போதிய விளைச்சல் இருந்தும் விவசாயிகள் வியாபாரிகளிடம் விவசாயத்திற்கு கடன் வாங்கியதால் அவர்களிடமே நெல்லை விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் ஆர்.என்.ஆர்.,எல்.என்.ஆர்.,கோ 50, கோ 51,அண்ணா ஆர் 4, அட்சயா உள்ளிட்ட நெல் ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள் நெல் சாகுபடி செய்ய கடன் வழங்குகிறது.
ஏக்கருக்கு 21 ஆயிரம் ரூபாய் வீதம் விவசாயிகள் எத்தனை ஏக்கர் வைத்துள்ளனரோ அதற்கு ஏற்ப கடன் வழங்க வேண்டும்.ஆனால் கூட்டுறவு வங்கிகளில் ஐந்து ஏக்கருக்கு விண்ணப்பித்தால் ஒரு ஏக்கருக்கு மட்டும் கடன் வழங்குவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
நடப்பாண்டில் ஏற்கனவே விவசாயிகள் வாங்கிய கடனை திரும்ப செலுத்தியிருந்தால் மட்டுமே கடன் வழங்கப்படும் என அறிவித்ததால் பெரும்பாலான விவசாயிகள் தனியார் வியாபாரிகளிடம் கடன் வாங்கி நெல் பயிரிட்டனர்.
இதனால் ஏக்கருக்கு 25 மூடை கிடைத்தும் அவர்களிடமே நெல்லை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அட்வான்ஸ் கொடுத்த வியாபாரிகள் திரும்ப பணமாக வாங்குவதில்லை. நெல்லாகத்தான் வாங்குவார்கள்.
இதனால் வேறு வழியின்றி விவசாயிகள் வியாபாரிகளிடமே நெல்லை விற்பனை செய்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 52 இடங்களில் நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் சன்னரக நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படும், ஜோதி ரக நெல்லை கொள்முதல் செய்வதில்லை. ஒரு கிலோ ரூ.24. 50 என அரசு கொள்முதல் செய்கிறது.
ஆனால் வியாபாரிகள் 14 ரூபாயில் இருந்து 19 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர். 50 சதவிகித விவசாயிகள் தனியார் வியாபாரிகளிடம் கடன் வாங்கியதால் அவர்களிடமே விற்பனை செய்து வருகின்றனர்.

