/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனம் மருத்துவமனை கட்டட பணி மந்தம்
/
திருப்புவனம் மருத்துவமனை கட்டட பணி மந்தம்
ADDED : ஜூலை 12, 2025 11:50 PM

திருப்புவனம்: திருப்புவனம் அரசு மருத்துவமனையில் விரிவான அவசர கால மகப்பேறு குழந்தைகள் பராமரிப்பு கட்டட பணி மந்த கதியில் நடப்பதால் நோயாளிகள், உறவினர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். பிரசவத்திற்காக சிவகங்கை மாவட்டம் மட்டுமல்லாது விருதுநகர், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த கர்ப்பிணிகளும் வந்து செல்கின்றனர்.
குழந்தைப் பிறப்பின் போது எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளை காப்பாற்ற அவசர கால சிகிச்சைக்கு கர்ப்பிணிகள், குழந்தைகள் மதுரைக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர்.
வருடத்திற்கு 500க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெறும் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் இன்குபேட்டர் வசதியுடன் விரிவான அவசர கால மகப்பேறு குழந்தைகள் பராமரிப்பு கட்டடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து மூன்று கோடியே 90 லட்சத்து 78 ஆயிரத்து 175 ரூபாய் செலவில் கட்டுமான பணிகளை கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் கடந்த ஜூலை 15ம் தேதி தொடங்கி வைத்தார்.
ஒரு வருடம் கடந்த நிலையில் பணிகள் மந்த கதியில் நடந்து வருகின்றன. கட்டட பணிக்கு தேவையான செங்கல், ஜல்லி, இரும்பு கம்பிகள் உள்ளிட்டவை மருத்துவமனைக்கு செல்லும் பாதையில் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் நோயாளிகள் சென்று வர சிரமப்படுகின்றனர். அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் சென்று திரும்ப முடிவதில்லை. எக்ஸ்ரே உள்ளிட்டவை எடுக்க நோயாளிகள் குறுகிய பாதையில் சென்று வருகின்றனர். வரும் அக்டோபருக்குள் பணிகள் நிறைவடைய வேண்டும் என உள்ள நிலையில் பணிகள் மந்த கதியிலேயே நடைபெறுகின்றன. எனவே பணிகளை விரைந்து முடித்திட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.