/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
டிராக்டர்களுக்கு கட்டணம்: டோல்கேட் பேச்சில் முடிவு
/
டிராக்டர்களுக்கு கட்டணம்: டோல்கேட் பேச்சில் முடிவு
டிராக்டர்களுக்கு கட்டணம்: டோல்கேட் பேச்சில் முடிவு
டிராக்டர்களுக்கு கட்டணம்: டோல்கேட் பேச்சில் முடிவு
ADDED : டிச 04, 2025 05:17 AM
கீழச்சிவல்பட்டி: திருப்புத்துார் அருகே திருமயம்- மானாமதுரை தேசியநெடுஞ்சாலையில் உள்ள செண்பகம்பேட்டை சுங்கச்சாவடியில் டிராக்டர் உரிமையாளர்களிடம் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து 20 கி.மீ.க்குள் உள்ள டிராக்டருக்கு உள்ளூர் வாகனக்கட்டணம் வசூலிப்பதாக முடிவானது.
நேற்று முன்தினம் செண்பகம் பேட்டை சுங்கச்சாவடியில் டிராக்டர்களுக்கு ரூ.260 வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. போலீசார் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று காலை 11:40 மணி அளவில் சில கட்சியினர் மற்றும் டிராக்டர் உரிமையாளர்கள் செண்பகம்பேட்டை சுங்கச்சாவடிக்கு டிராக்டர்களுடன் வந்தனர். டிராக்டர்களுக்கு கட்டணம் வசூலிப்பதற்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். சுங்கச்சாவடி தரப்பில் விவசாயப் பணிகளுக்கான டிராக்டர்களுக்கு மட்டுமே கட்டணத்திற்கு விதிவிலக்கு என்றனர். இருதரப்பும் வாக்குவாதம் செய்தனர்.
தொடர்ந்து டிராக்டர்கள் சுங்கச்சாவடி வழிகளில் நின்றதால் மற்ற வாகனங்கள் கட்டணமில்லா சுங்க வழியில் சென்றன. இன்ஸ்பெக்டர்கள் பிரவின் டேனி,சசிக்குமார் வந்து சமாதானப்படுத்தி இருதரப்பினருடன் பேசினர். அதில் டிராக்டர்களுக்கு 20 கி.மீ.க்குள் உள்ளூர் வாகனங்களுக்கான மாதக் கட்டணம் ரூ.340 செலுத்தவும், நான்கு வழிச்சாலைக்கட்டணம் வசூலிப்பதற்கு பதிலாக இருவழிச்சாலைக்கான கட்டணம் வசூலிக்கவும் முடிவானது.

