/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்டுபட்டியில் நாளை மஞ்சுவிரட்டு
/
கண்டுபட்டியில் நாளை மஞ்சுவிரட்டு
ADDED : ஜன 17, 2025 05:18 AM
சிவகங்கை: சிவகங்கை அருகேயுள்ள கண்டுபட்டி பழைய அந்தோணியார் கோவில் தை பொங்கல் விழாவை முன்னிட்டு நாளை (ஜன.,18) நடக்கும் மஞ்சுவிரட்டில் 150க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்க உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் தை 5 ம் தேதி கண்டுபட்டி பழைய அந்தோணியார் கோயிலில் ஹிந்துக்களால் பொங்கல் விழா நடத்தப்படும். இந்த ஆண்டிற்கான பொங்கல் விழா நாளை (ஜன.,18) நடக்கிறது.
மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்காக பொட்டலில் தடுப்பு, பார்வையாளர் அமர கேலரி அமைக்கும் பணி முடிந்து, தயார் நிலையில் வைத்துள்ளனர்.
பழைய அந்தோணியார் கோயிலில் பக்தர்கள் பொங்கல் வைத்தும், கரும்பு தொட்டில் சுமந்தும் நேர்த்தி செலுத்த உள்ளனர்.
நாளை மதியம் 2:00 மணிக்கு பழைய அந்தோணியார் கோயிலில் இருந்து பரிவட்டங்களை எடுத்துக்கொண்டு, கிராம கமிட்டியினர் ஊர்வலமாக மஞ்சுவிரட்டு பொட்டலுக்கு வருகை தர உள்ளனர். அதற்கு பின் காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்படும்.
அதற்கு முன்னதாக காலை 11:00 மணியில் இருந்தே பொட்டலில் ஆங்காங்கே நுாற்றுக்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்படும்.
இக்காளைகளை அடக்க ஏராளமான வீரர்கள் பங்கேற்க உள்ளனர். கண்டுபட்டி ரோட்டின் மேல் உள்ள புதிய அந்தோணியார் கோயில் முன்பாகவும் பக்தர்கள் பொங்கல் வைத்தும், கரும்பு தொட்டில் சுமந்தும் நேர்த்தி செலுத்த உள்ளனர்.
சைவ உணவு உபசரிப்பு
மஞ்சுவிரட்டு விழாவை காண வெளியூர்களில் இருந்து பார்வையாளர், மாடுபிடி வீரர்கள் வருகை தருவர். அவர்கள் பசியாற ஏதுவாக ஒவ்வொருவர் வீட்டிலும் நாளை காலை 11:00 மணி முதல் சைவ உணவு சமைத்து, கோயில், மஞ்சுவிரட்டு பொட்டலுக்கு செல்வோரை அன்பாக வீட்டிற்கு அழைத்து சாப்பாடு வழங்குவர்.
இந்நடைமுறையை இக்கிராம மக்கள் 200 ஆண்டுக்கும் மேலாக கடைபிடிக்கின்றனர்.
கிராம கமிட்டி தலைவர் சக்திதாசன் தலைமையில் விழாக்குழுவினர் ஏற்பாட்டை செய்துள்ளனர்.