ADDED : அக் 26, 2026 04:47 PM
சிவகங்கை: காளையார்கோவிலில் இன்று நடக்க உள்ள மருது சகோதரர்களின் 225வது நினைவு நாளையொட்டி மாவட்டத்தில் போக்குவரத்து வழிதடத்தை மாவட்ட போலீசார் மாற்றம் செய்துள்ளனர்.
மதுரையிலிருந்து தொண்டி,திருவாடானை செல்லும் வாகனங்கள், சிவகங்கை - திருப்புத்துார் சாலையில் சென்று ஒக்கூர், காளையார்மங்கலம், நாட்டரசன்கோட்டை, வெற்றியூர் விலக்கு, ஆண்டிச்சியூரணி வழியாகத் தொண்டி சாலையை அடைந்து செல்ல வேண்டும். ராமநாதபுரம் பகுதியிலிருந்து சிவகங்கை மற்றும் மதுரைக்கு வரும் வாகனங்கள் ஆண்டிச்சியூரணி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, வெற்றியூர் நான்கு ரோடு சந்திப்பை அடைந்து நடராஜபுரம் விலக்கு, நாட்டரசன்கோட்டை வழியாக திருப்புத்துார் மானாமதுரை புறவழிச்சாலை வழியாக செல்ல வேண்டும். இன்று காலை 6:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் மக்களின் வாகனப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாகன நிறுத்தம்
காளையார்கோவில் மருது சகோதரர்கள் நினைவு தினத்திற்கு செல்லும் பேருந்துகள் மறவமங்கலம் ரோட்டில் பயணிகளை இறக்கிவிட்டு மாந்தாளி வாகன நிறுத்துமிடத்திற்குச் செல்ல வேண்டும். கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் தெப்பக்குளம் அருகே ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்த வேண்டும். விழா நடைபெறும் பகுதிக்குள் டூவீலரில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
