/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனம் சந்தையால் போக்குவரத்து நெரிசல்
/
திருப்புவனம் சந்தையால் போக்குவரத்து நெரிசல்
ADDED : மே 23, 2025 11:49 PM

திருப்புவனம்: திருப்புவனத்தில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை மார்க்கெட் வீதியில் உரிய அனுமதி பெறாமல் நடக்கும் காய்கறி சந்தையால் மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
திருப்புவனம் மார்க்கெட் வீதியை கடந்து தான் தேரடி வீதி, ரத வீதிகள், போலீஸ் லயன் தெரு, கே.கே. நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும், இப்பகுதியில் மூன்று வார்டுகளைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. திருப்புவனத்தில் செவ்வாய்கிழமை காய்கறி சந்தை நடந்து வரும் வேளையில் வியாபாரிகள் பலரும் விதிகளை மீறி வெள்ளிக்கிழமை மார்க்கெட் வீதியில் இருபுறமும் கடைகள் அமைத்து வருகின்றனர்.
காலை எட்டு மணி முதல் இரவு பத்து மணி வரை நடைபெறும் சந்தையால் இப்பகுதியில் வசிக்கும் பலரும் வீட்டை விட்டு வெளியேறவே முடியவில்லை. வெள்ளிக்கிழமை வீடுகளில் எந்த விசேஷமும் வைக்க முடிவதில்லை. திடீரென விபத்து ஏதும் ஏற்பட்டால் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் என எதுவுமே வர முடியாது.
டூவீலர்கள் கூட செல்ல முடியாதபடி தெரு முழுவதும் 300க்கும் மேற்பட்ட கடைகள் அமைத்து வியாபாரம் செய்வதால் தெரு மக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். அனுமதி இல்லாமல் கடை நடத்துவோரிடம் பேரூராட்சி சார்பில் தரை வாடகையும் வசூலிக்கப்படுகிறது.
போக்குவரத்திற்கு இடையூறாக நடத்தப்படும் இந்த சந்தையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.