ADDED : ஜன 04, 2025 03:54 AM
சிவகங்கை: ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு தாட்கோ சார்பில் விமான நிலையத்திற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது, இம்மாவட்டத்தில் பிளஸ் 2 அல்லது பட்டம் முடித்த ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய தாட்கோ மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சி மையத்தில் விமான நிலைய பயணிகள் சேவை, சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி, சுற்றுலாதுறை சார்ந்த படிப்பு, விமான பயண முன்பதிவு போன்ற சான்றிதழ் பயிற்சி வழங்கி, வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும்.
வயது 18 முதல் 23க்குள் இருத்தல் வேண்டும். பயிற்சி காலமான 6 மாதமும் விடுதியில் தங்கி பயிற்சி பெற வேண்டும்.
பயிற்சிக்கான செலவின தொகை ரூ.95,000யை தாட்கோ செலவிடும். பயிற்சிக்கு பின் அங்கீகார சான்று வழங்குவதோடு, தனியார் விமான நிலையங்களில் வேலைவாய்ப்பு பெறலாம். துவக்கத்தில் மாத சம்பளம் ரூ.20,000 முதல் 22,000 வரை கிடைக்கும். பின் திறமைக்கு ஏற்ப ரூ.50,000 முதல் 70,000 வரை பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெற www.tahdco.com இணையதளம் மூலம் பதிவு செய்யலாம், என்றார்.

