/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காஞ்சிரங்காலில் 4 வழிச்சாலைக்கு மரங்கள் வெட்டி அகற்றம்
/
காஞ்சிரங்காலில் 4 வழிச்சாலைக்கு மரங்கள் வெட்டி அகற்றம்
காஞ்சிரங்காலில் 4 வழிச்சாலைக்கு மரங்கள் வெட்டி அகற்றம்
காஞ்சிரங்காலில் 4 வழிச்சாலைக்கு மரங்கள் வெட்டி அகற்றம்
ADDED : டிச 26, 2024 04:55 AM

சிவகங்கை: சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் ரோடு விரிவாக்க பணிக்காக பழமையான புளிய மரங்கள் வெட்டி அகற்றப்படுகின்றன.
மாநில சாலைகள் விரிவாக்க திட்டத்தின் கீழ் சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் இருந்து பையூர், ஆயுதப்படை மைதானம் வழியாக இளையான்குடி ரோட்டில் கல்குளம் வரை 7.6 கி.மீ., துாரத்திற்கு சுற்றுச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துதல் என ரூ.109.51 கோடி ஒதுக்கி, அதில் ரூ.80 கோடியில் சுற்றுச்சாலைக்கான ரோடு, பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் காஞ்சிரங்காலில் இருந்து ரோடு பணி துவங்கி பையூர் - தொண்டி ரோடு சந்திப்பை கடந்து ஆயுதப்படை மைதானத்தில் 300 மீட்டர் துாரத்திற்கு துாக்கு பாலம் கட்ட உள்ளனர்.
முதற்கட்டமாக இளையான்குடி ரோடு கல்குளம் வரை சுற்றுச்சாலை கட்டும் பணி நடக்கிறது. இச்சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ் காஞ்சிரங்காலில், திருப்புத்துார் ரோட்டின் இருபுறமும் சேர்த்து 150 மீட்டர் துாரத்திற்கு திருப்புத்துார் இரு வழி சாலையை நான்கு வழி சாலையாக தரம் உயர்த்த உள்ளனர். இதற்காக பழமையான மரங்களை வெட்டி வருகின்றனர்.
காஞ்சிரங்காலில் இருந்து சுற்றுச்சாலையை இணைக்கும் விதமாக 4 வழி சாலையாக தரம் உயர்த்தி, ரோட்டின் நடுவே சென்டர் மீடியன்' அமைக்க உள்ளனர். தலா 7 மீட்டர் அகலத்திற்கு இரு பகுதியிலும் ஒட்டுமொத்தமாக 18 மீட்டர் அகலத்திற்கு ரோட்டை விரிவாக்கம் செய்ய உள்ளனர். இதற்காக காஞ்சிரங்காலில் மரங்களை வெட்டி வருகின்றனர். முதற்கட்ட பணி முடிந்ததும், அடுத்த கட்டமாக இளையான்குடி ரோடு கல்குளத்தில் இருந்து மானாமதுரை ரோட்டில் கீழக்கண்டனி அருகே இளஞ்சி வரை 3 கி.மீ., துாரத்திற்கு சுற்றுச்சாலை அமைக்கும் பணி நடக்க உள்ளது. இதற்கென தனியாக நிதி ஒதுக்கப்பட உள்ளது.
காஞ்சிரங்காலில் 4 வழி சாலை
மாநில சிறப்பு சாலை திட்ட அதிகாரி கூறியதாவது: காஞ்சிரங்காலில் இரு வழிச்சாலையை 150 மீட்டருக்கு நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்த உள்ளோம். இதற்காக அந்த ரோட்டின் இருபுறமும் வளர்ந்துள்ள மரங்கள் வெட்டப்படுகின்றன. வளர்ச்சி பணிக்காக உரிய அனுமதியுடன் மரம் வெட்டும் பணி நடக்கிறது, என்றார்.

