ADDED : ஜூலை 12, 2025 11:41 PM

திருப்புத்துார்: திருப்புத்துார் பெரிய கண்மாயிலிருந்து தென்மாப்பட்டு செல்லும் பாசனக் கால்வாயை சீரமைக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.
திருப்புத்துார் பெரிய கண்மாயிலிருந்து தென்மாப்பட்டிற்கு செல்லும் பாசனக்கால்வாய் தாம்போகி எனப்படுகிறது.
சிங்கம்புணரி ரோட்டில் உள்ள இந்த மதகில் கண்மாய் நீர் பெருகியதும் தாமாகவே தென்மாக்கண்மாய்க்கு நீர் வரத்து துவங்கும்.
தற்போது ஷட்டர்கள் போடப்பட்டுள்ளது. அண்மையில் பாலாற்றில் பராமரிப்பு பணி நடந்தன. ஆனால் தாம்போகி பாசன கால்வாய்பகுதியில் பராமரிப்பு நடைபெறவில்லை.
அது போல கண்மாய் கரைகள், நீர் செல்லும் பாசனக் கால்வாய்களில் பராமரிப்பு பணி நடைபெறவில்லை.
மழை காலம் துவங்க உள்ளதால் கண்மாய் நுழைவு வாயில் பகுதியில் முட்செடிகளை அகற்றி பராமரிக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.
மேலும் பல தெருக்கள் வழியாக செல்லும் இந்த கால்வாயில் பெருகியுள்ள செடிகளை அகற்றி தென்மாப்பட்டு கண்மாய் வரை பராமரிக்கவும் கோரியுள்ளனர்.