ADDED : ஆக 23, 2025 11:46 PM

கீழடி: கீழடியில் உரிய எச்சரிக்கை அறிவிப்பு பலகை, பாதுகாப்பு கருவிகள் இன்றி பாலப்பணி நடந்து வருவதால் நேற்று திருமண விழாவிற்கு அழைப்பிதழ் கொடுக்க சென்ற புதுமாப்பிள்ளை விபத்தில் சிக்கி காயத்துடன் தப்பினார்.
மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு தினசரி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இப்பாதையை பயன்படுத்தி வருகின்றன.
கீழடி விலக்கில் தினசரி விபத்து ஏற்பட்டு பலரும் காயமடைந்து வருகின்றனர். இதனை தவிர்க்க கீழடி விலக்கில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததையடுத்து பாலம் கட்டுமான பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகின்றன.
ஏற்கனவே உள்ள நான்கு வழிச்சாலையின் இருபுறமும் 10 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி புதிதாக மண் நிரப்பி மேம்பாலம் அமைக்க உள்ளனர். இதற்காக நான்கு வழிச்சாலையின் இருபுறமும் 10 அடி ஆழத்திற்கு நீண்ட துாரத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
பள்ளம் இருப்பதற்கான எந்த எச்சரிக்கை பலகை, பிரதிபலிப்பான், தடை எதுவுமே இல்லை. இதனால் தினசரி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். விருதுநகர் மாவட்டம் வீர ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் 27, மணிமுத்தாறு 12வது பட்டாலியனில் போலீசாக பணியாற்றுகிறார்.
இவருக்கு செப்டம்பர் 4ம் தேதி திருமணம் நடக்க உள்ளது. இதற்காக நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க திருப்புவனம் வழியாக கீழடி சென்றார். கீழடி விலக்கில் திரும்பும் போது பின்னால் வந்த டிப்பர் லாரியும் கீழடிக்கு திரும்பியுள்ளது. சாலையோரம் பள்ளம் தோண்டியிருப்பதால் டூவீலரை நிறுத்தியுள்ளார். ஆனால் டிப்பர் லாரி டூவீலர் மீது மோதியதில் நிலை தடுமாறி லாரி பின் சக்கரத்தில் சிக்கினார்.
நல்வாய்ப்பாக அவரின் வலது கை மட்டும் லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி நசுங்கி காயம் ஏற்பட்டது. கீழடி சோதனைச்சாவடியில் பணியில் இருந்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பொதுமக்கள் கூறுகையில்: பாலம் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்தகாரர் எந்த வித எச்சரிக்கை பலகை, விளக்கு என எதுவுமே வைக்கவில்லை.
கீழடியைச் சுற்றியுள்ள கிராமமக்கள் பலரும் மதுரையில் கூலி வேலை பார்த்து விட்டு ஊர் திரும்புகின்றனர். இரவில் சாலையோர பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர் என்றனர்.

