துார்வாரப்படாத கண்மாய்கள் விவசாயம் பாதிப்பதாக கவலை
துார்வாரப்படாத கண்மாய்கள் விவசாயம் பாதிப்பதாக கவலை
ADDED : ஆக 31, 2026 12:50 AM

காரைக்குடி: கல்லல் அருகேயுள்ள நடுவிக்கோட்டை மேல்குடிகண்மாய் 10 ஆண்டுகளுக்கும் மேலாக துார்வாரப்படாததால் விவசாயம் பாதிப்படைவதாக விவசாயிகள் புகார் எழுப்பி வருகின்றனர்.
கல்லல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நடுவிக்கோட்டை ஊராட்சி மேல்குடி கண்மாயை நம்பி 100 ஏக்கருக்கும் அதிகமாக விவசாயம் நடந்து வந்தது. ஏராளமான விவசாயிகள் இக்கண்மாயை நம்பி விவசாயம் செய்து வந்த நிலையில் கண்மாய் முழுவதும் கருவேல மரங்கள் சூழ்ந்து கிடக்கிறது. இதனால் விவசாயம் முற்றிலும் பொய்த்துப் போனது. கண்மாய் துார்வாரி 10 ஆண்டுகளுக்கும் மேலானதால் கண்மாயை பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது.
இதுகுறித்து சொர்ணம் கூறுகையில்; இக்கண்மாயை நம்பி 100 ஏக்கருக்கும் அதிகமாக விவசாயம் நடந்து வந்தது. கும்மங்குடி அணைக்கட்டு வரத்து மூலம் இக்கண்மாய் நிரம்பும். விவசாயம் நடந்து வந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கருவேல மரங்கள் சூழ்ந்து கண்மாயை பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. தண்ணீர் இல்லாததால் விவசாயமும் பொய்த்து போனது. கண்மாயை தூர்வார கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. கண்மாயை தூர்வார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
