/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் பனிப்பொழிவால் வாகனங்கள் தடுமாற்றம்
/
திருப்புவனத்தில் பனிப்பொழிவால் வாகனங்கள் தடுமாற்றம்
திருப்புவனத்தில் பனிப்பொழிவால் வாகனங்கள் தடுமாற்றம்
திருப்புவனத்தில் பனிப்பொழிவால் வாகனங்கள் தடுமாற்றம்
ADDED : அக் 22, 2025 12:49 AM

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் விடிய விடிய மழை பெய்ததால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
நேற்று மாலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் சிவகங்கை 41,மானாமதுரை 33, இளையான்குடி 38, திருப்புவனம் 84, திருப்புத்துார் 4.30, காரைக்குடி 23, தேவகோட்டை 32, காளையார்கோயில் 34, சிங்கம்புணரி 39 மி.மி., மழை பதிவாகியுள்ளது. திருப்புவனத்தில் அதிகபட்சமாக 84 மி.மீ., பெய்தாலும் பனியின் தாக்கமும் அதிகமாக காணப்பட்டது.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் சம்பா பருவத்தில் ஒரு லட்சம் ஏக்கரில் நெல் நடவு பணிகள் நடைபெறும். போதிய மழை இல்லாததால் இந்தாண்டு இதுவரை 25 சதவிகிதம் மட்டுமே நெல் நடவு பணிகள் நடந்துள்ளன.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய பின் நடவு பணிகளை மேற்கொள்ள விவசாயிகள் காத்திருந்த நிலையில் திருப்புவனம் வட்டாரத்தில் நேற்று காலை எட்டு மணி வரை வெம்பா எனப்படும் பனிப்பொழிவு காணப்பட்டது. தீபாவளியன்று இரவு ஒன்பது மணிக்கு தொடங்கிய வெம்பா பனிப்பொழிவு நேற்று காலை ௮:௦௦ மணி வரை நீடித்தது. பனிப்பொழிவு காரணமாக நெல் நாற்றுகள் கருகும் அபாயம் உள்ளது.
விவசாயிகள் கூறுகையில்: வெம்பா பனிப்பொழிவு மனிதனுக்கும் பயிர்களுக்கும் சேதத்தை ஏற்படுத்த கூடியது. வெயில், மழை, பனிப்பொழிவு என மாறுபட்ட சீதோஷ்ண நிலையில் முதியோர்கள், சிறுவர்கள் உடல் ஏற்றுகொள்ளாது, அதே போல நெல் நாற்றுகள், பயிர்கள், கத்தரி, வெண்டை போன்ற பயிர்கள் பாதிக்கப்படும், பனியை தொடர்ந்துமழை பெய்யும் போது நாற்றுகள் அதிகளவில் பாதிக்கப்படும், என்றனர்.
பனிப்பொழிவு காரணமாகவும், தொடர்ந்து சாரல் மழை காரணமாகவும் மதுரை - - பரமக்குடி நான்கு வழிச்சாலை இரவு போல காட்சியளித்தது. வெம்பா பனி அடர்த்தியாக இருப்பதால் எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரியவில்லை.
அடை மழை திருப்புத்துார்: திருப்புத்துாரில் அவ்வப்போது கனத்த மழையாகவும், துாறலாகவும் மாலை வரை தொடர்ந்து பெய்தது. பல ஆண்டுகளுக்கு பின் திருப்புத்துாரில் ' அடை மழை' யாக, காற்று வீசாமல் தொடர்ந்து பெய்ததால் திருப்புத்துார் வட்டாரம் குளிர்ச்சியாக மாறியது. ரோடுகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.
பொதுப்பணித் துறையினர் கூறுகையில்,' தற்போதைய மழையில் மண் ஈரப்பதமாகி குளிர்ந்துள்ளது. மழை தொடர்ந்தால் கண்மாய்களில் நீர் சேகரமாகும். நத்தம், புதுக்கோட்டை, மேலூர் பகுதியில் மழை அதிகரித்தால் ஆறுகளில் எளிதாக நீர் வரத்து இருக்கும்' என்றனர்.
தேவகோட்டை நகரில் மக்கள் வீட்டிலேயே முடங்கியதால் இயல்பு வாழ்க்கை பாதித்தது. பகலில் பஸ்களிலும் கூட்டமின்றி இருந்தது.
நேற்று முன்தினம் நகரில் பெய்த மழை கிராமங்களில் பெய்யாத நிலையில் நேற்று அருகில் உள்ள கிராமங்களிலும் மழை பெய்தது.