/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனம் - நரிக்குடி ரோட்டில் பாலம் கிராம மக்கள் வலியுறுத்தல்
/
திருப்புவனம் - நரிக்குடி ரோட்டில் பாலம் கிராம மக்கள் வலியுறுத்தல்
திருப்புவனம் - நரிக்குடி ரோட்டில் பாலம் கிராம மக்கள் வலியுறுத்தல்
திருப்புவனம் - நரிக்குடி ரோட்டில் பாலம் கிராம மக்கள் வலியுறுத்தல்
ADDED : ஏப் 07, 2025 06:35 AM

திருப்புவனம் : திருப்புவனத்தில் இருந்து நரிக்குடி செல்லும் பாதையில் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் பாலம் அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்புவனத்தில் இருந்து அல்லிநகரம், எஸ்.நாங்கூர், முக்குளம் வழியாக நரிக்குடி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல நெடுஞ்சாலைத்துறை சார்பில் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இக்கிராமமக்கள் பலரும் தங்களது தேவைகளுக்காக திருப்புவனம் வந்து செல்கின்றனர். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மருத்துவமனை, விவசாய இடு பொருட்கள் உள்ளிட்டவைகள் வாங்க தினசரி திருப்புவனம் வந்து செல்கின்றனர்.
திருப்புவனம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் வந்து செல்கின்றனர். இப்பாதையில் மதுரை - ராமேஸ்வரம் அகல ரயில்பாதை குறுக்கிடுவதால் தானியங்கி ரயில்வே கேட் அமைக்கப்படுகிறது.
தினசரி ஆறு முறை கேட் மூடி திறக்கப்படுகிறது. இதுதவிர மதுரை ரயில் நிலையத்தில் இடப்பற்றாக்குறை உள்ளிட்ட காலங்களில் சரக்கு ரயில்கள், தொலை துார ரயில்கள், பழுது பார்க்கும் ரயில்கள் ஆகியவை திருப்புவனம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுகிறது.
ஏப்ரல் 6ம் தேதி பாம்பன் பாலம் திறக்கப்பட்ட பின் தொலை தூர ரயில்கள் ஏராளமானவை இப்பாதையில் இயக்கப்படும். எனவே நரிக்குடி பாதையில் உள்ள ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படும், ஒரு முறை ரயில்வே கேட் மூடப்பட்டால் நான்கு வழிச்சாலை வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அவசரத்திற்கு செல்ல முடிவதில்லை. அதிலும் காலை ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை நான்கு முறை ரயில்வே கேட் மூடப்படுகிறது.
ரயில்வே கேட் மூடப்பட்டாலும் உரிய சிக்னல் கிடைத்தால் மட்டுமே கேட் உடனடியாக திறக்கப்படும், இல்லையென்றால் குறைந்த பட்சம் 15 முதல் 30 நிமிடங்கள் வரை கேட் மூடப்படும், இதனால் உரிய நேரத்தில் பள்ளி, கல்லூரி செல்ல முடியாமல் மாணவ, மாணவியர்கள் தவிக்கின்றனர்.
இதனை தவிர்க்க இப்பாதையில் மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

