/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியுடன் ஊராட்சிகளை இணைக்க கிராமத்தினர் எதிர்ப்பு
/
காரைக்குடியுடன் ஊராட்சிகளை இணைக்க கிராமத்தினர் எதிர்ப்பு
காரைக்குடியுடன் ஊராட்சிகளை இணைக்க கிராமத்தினர் எதிர்ப்பு
காரைக்குடியுடன் ஊராட்சிகளை இணைக்க கிராமத்தினர் எதிர்ப்பு
ADDED : ஜன 28, 2025 12:52 AM

சிவகங்கை: காரைக்குடி மாநகராட்சியுடன் சுற்றியுள்ள ஐந்து கிராம ஊராட்சிகளை இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
காரைக்குடி நகராட்சி சில மாதங்களுக்கு முன் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. சுற்றியுள்ள சங்கராபுரம், இலுப்பக்குடி, கோவிலுார், தளக்காவூர், அரியக்குடி ஆகிய ஊராட்சி பகுதிகளை மாநகராட்சியுடன் இணைத்து அரசு உத்தரவிட்டது. அதன்படி மாநகராட்சியுடன் 5 கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகள் இணைக்கப்பட்டு விட்டன.
இக்கிராம ஊராட்சிகளில் வேலை உறுதி திட்டம் மூலம் பயனடைந்த பெண்களுக்கு வேலை கிடைக்கவில்லை. மேலும் புதிதாக பணி வழங்கவும் முடியாது எனவும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்து விட்டனர். இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே 5 கிராம ஊராட்சிகளை காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து நேற்று கிராம மக்கள் வேலை உறுதி திட்ட அட்டையுடன் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அவர்களுடன் கூடுதல் எஸ்.பி., பிரான்சிஸ், இன்ஸ்பெக்டர் அன்னராஜ் பேச்சு வார்த்தை நடத்தினர். சாக்கோட்டை அ.தி.மு.க., (மேற்கு) ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் கிராமத்தினரை கலெக்டர் ஆஷா அஜித்திடம் அழைத்து சென்றனர். அவரிடமும் கிராமத்தினர் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர்.
புதிதாக நகர்புற வேலை திட்டம்
இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது: 2024 மார்ச்-சில் காரைக்குடி மாநகராட்சியுடன் 2 பேரூராட்சிகள், 5 கிராம ஊராட்சிகள் இணைப்பதற்கான அரசாணை வந்து விட்டது. வேலை உறுதி திட்ட பணிகளுக்கு மாற்றாக அரசிடம் நகர்ப்புற வேலை உறுதி திட்டத்தை உருவாக்க கோரிக்கை வைக்கப்படும். ஊராட்சிகளை இணைக்க வேண்டாம் என கிராமத்தினர் அளிக்கும் மனுக்கள் அரசின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.