/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாலை வசதியின்றி கிராம மக்கள் தவிப்பு
/
சாலை வசதியின்றி கிராம மக்கள் தவிப்பு
ADDED : ஜூன் 22, 2024 05:22 AM

எஸ்.புதுார் ஒன்றியத்தில் மேலவண்ணாரிருப்பில் இருந்து உரத்துப்பட்டி செல்லும் 5 கி.மீ.,துார தார்சாலை 1999ம் ஆண்டு அப்போதைய தி.மு.க., எம்.எல்.ஏ., ராம.சிவராமன் முயற்சியால் போடப்பட்டது.
அதற்கு பிறகு சாலை பழுதடைந்த நிலையில் சீரமைக்க அப்பகுதி கிராம மக்கள் வலியுறுத்தினர். 2020ல் மீண்டும் புதிதாக பணிகள் துவங்கியது.
3 கி.மீ., துாரம் தார் சாலை போடப்பட்ட நிலையில் இடையில் மூன்று இடங்களில் 2 கி.மீ., துாரத்திற்கு வனத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளதாக கூறி வனத்துறையினர் சாலைப்பணிக்கு தடை விதித்தனர்.
கிராவல் கொட்டப்பட்டு ஜல்லி பரப்பிய நிலையில் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. வனத்துறையிடம் ஆன்லைனில் முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற்றால் சாலைப் பணியை துவங்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அதிகாரிகள் முறையாக விண்ணப்பிக்காமல் கடந்த நான்கு ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வருகின்றனர்.
அவ்வப்போது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு வந்தது. ஆனால் இதே தாலுகாவில் மற்ற சில இடங்களில் இது போன்ற பிரச்னை இருந்தும் சாலைப் பணிகள் முடிவடைந்துள்ளது.
ஜோதி பித்தரைச்செல்வம், ஊராட்சி தலைவர் மேலவண்ணாரிருப்பு: சாலைப்பணி நிறைவடையாததால் இவ்வழியாகச் சென்ற அரசு பஸ், மினிபஸ் வருவதில்லை. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட கிராமத்திற்கு வர முடியவில்லை. கர்ப்பிணிகள், உடல் நலமில்லாதவர்களை கட்டிலில் படுக்க வைத்து தூக்கிச் சென்று பிறகு மெயின் ரோட்டில் இருந்து ஆம்புலன்சில் அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது.
இச்சாலை அமைந்துள்ள பகுதியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இடைப்பட்ட கிராம மக்கள் கடந்த 4 ஆண்டுகளாக சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர்.
மாணவர்கள் டூவீலரில் கூட செல்ல முடியாத நிலை இருப்பதால் கரடு முரடான சாலையில் நடந்து சென்று வருகின்றனர். ஆசிரியர்கள் வேறு வழியில்லாமல் அடர்ந்த காட்டுப் பகுதியில் ஆபத்தான முறையில் நடந்து வந்து செல்கின்றனர். மூன்று ஊராட்சி தலைவர்கள் அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
விரைந்து சாலை பணியை முடிக்காவிட்டால் சுற்றுவட்டார கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.
இந்நிலையில் மாவட்ட கலெக்டர் ஒப்புதலுடன் வனத்துறைக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், விரைவில் தடையில்லா சான்று பெறப்பட்டு சாலை பணி முடிக்கப்படும் என்று ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.