/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பள்ளி மாணவர்களுக்கு பரவும் வைரஸ் காய்ச்சல்
/
பள்ளி மாணவர்களுக்கு பரவும் வைரஸ் காய்ச்சல்
ADDED : நவ 23, 2024 06:32 AM
காரைக்குடி; காரைக்குடி உட்பட மாவட்ட முழுவதும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை தாக்கும் வைரஸ் காய்ச்சலை தடுக்க, பள்ளிகளில் நிலவேம்பு கஷாயம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது.பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. காரைக்குடி பகுதி மட்டுமின்றி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை மற்றும் தட்பவெப்ப சூழல் மாற்றத்தின் காரணமாக மாணவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் அதிகம் பரவி வருகிறது.
முன்பு, பள்ளிக் குழந்தைகளை பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறை சார்பில் பள்ளிகளில் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டு வந்தது. தவிர பொது இடங்களிலும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. இது காய்ச்சலை உருவாக்கும் வைரஸ்களை அழிப்பதுடன் உடலுக்கு எதிர்ப்பு சக்தியையும் அளிப்பதால் பலரும் கஷாயத்தை வாங்கி அருந்தினர்.
தற்போது மாணவர்கள் மட்டும் இன்றி மக்களுக்கும் வைரஸ் காய்ச்சல், இருமல் அதிகம் பரவி வரும் நிலையில் பள்ளிகளிலும் பொது இடங்களிலும் நிலவேம்பு கஷாயம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.