
இளையான்குடி சுற்று வட்டார பகுதிகளான கோச்சடை,கீழநெட்டூர், வேலடி மடை, குறிச்சி பிராமணக்குறிச்சி, விஜயன்குடி, முனைவென்றி, சூராணம், சாலைக்கிராமம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் விவசாயிகள் குண்டு மிளகாய்க்கு அடுத்தபடியாக நெல் விவசாயம் செய்து வருகின்றனர்.
வானம் பார்த்த பூமியான இப்பகுதியில் பருவமழை காலங்களில் பெய்யும் மழையை வைத்து விவசாயம் செய்து வருகிற நிலையில் தற்போது ஆடிப்பட்டத்தின் போது விவசாயிகள் தங்களது நிலங்களை உழுது நேரடி நெல் விதைப்புக்காக காத்திருக்கும் நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மழை பெய்யாத காரணத்தினால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
மேலும் மேற்கண்ட கிராம பகுதிகளில் கடுமையான வெயில் காரணமாக துணை விவசாயமான வாழை மற்றும் பருத்தியும் தண்ணீர் இல்லாமல் வாடி வருவதால் விவசாயிகள் இந்த வருடம் மிகவும் நஷ்டம் ஏற்படும் என கூறுகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் சிலர் கூறியதாவது:
கடந்த ஆடி மாதத்தின் போது தொடர்ந்து 4 நாட்கள் பெய்த மழையை அடுத்து உழுவதற்காக கடன் வாங்கி நிலத்தை சமப்படுத்தியுள்ளோம்.
மழை பெய்யாத காரணத்தினால் என்ன செய்வதென்று தெரியாமல் சிரமப்பட்டு வருகிறோம். மழை வந்தால் தான் விவசாய பணிகளை துவக்க வேண்டிய நிலை உள்ளது. வழக்கத்திற்கு மாறாக கடந்த சில நாட்களாக வெயிலின் கோரம் அதிகமாக உள்ளது என்றனர்.