/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திறந்தவெளியில் கொட்டப்படும் கழிவுகள்
/
திறந்தவெளியில் கொட்டப்படும் கழிவுகள்
ADDED : ஜன 16, 2026 05:33 AM
சிவகங்கை: சிவகங்கை அருகே தேசிய நெடுஞ்சாலைகளில் ரோட்டோரங்களில் திறந்தவெளியில் செப்டிக் டேங்க் கழிவுகளை வாகனங்களில் இருந்து கொட்டுவதால் சுகாதாரகேடு ஏற்படுவதோடு நோய் பரவும் அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
சிவகங்கையில் சேகரமாகும் கழிவுகளை மதுரை - தொண்டி சாலை, மானாமதுரை - தஞ்சாவூர் சாலையிகளில் ரோட்டோரங்களில் விடுவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். பொதுவாக செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்றும் வாகனங்கள் சட்ட விரோதமாக திறந்தவெளியில் கொட்டுவதைத் தடுக்க அரசு விதிமுறை வகுத்துள்ளது. அதன் படி செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்றும் வாகனங்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உரிமம் பெற வேண்டும்.
வாகனத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தியிருக்க வேண்டும். அகற்றப்படும் கழிவுகளை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் மட்டுமே கொட்ட வேண்டும். கழிவுகளை பாதுகாப்பற்ற முறையில் திறந்தவெளியில் கொட்டினால் ரூ.50,000 வரை அபராதம் விதிக்க வேண்டும். தொடர்ந்தால், உரிமத்தை ரத்து செய்யலாம். சிவகங்கை நகராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கப்படும் செப்டிக் டேங்க் கழிவுகளை முத்துப்பட்டியில் உள்ள நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கொட்ட வேண்டும்.
ஆனால் செப்டிக் டேங்க் கழிவு அகற்றும் வாகனங்கள், சிவகங்கையை சுற்றி சாலையோரங்கள் விவசாயப் பகுதிகள் நீர்நிலைகளில் கொட்டுகின்றனர். ஒருசிலர் ஜிபிஎஸ் கருவி பொருத்துவது போன்ற எந்த விதிமுறையையும் பின்பற்றுவதில்லை. இதை நகராட்சி அதிகாரிகளும் கண்காணிப்பதில்லை. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அச்சம் நிலவுகிறது.

