/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் காட்சி பொருளாக தண்ணீர் தொட்டி: தவிக்கும் மக்கள்
/
திருப்புவனத்தில் காட்சி பொருளாக தண்ணீர் தொட்டி: தவிக்கும் மக்கள்
திருப்புவனத்தில் காட்சி பொருளாக தண்ணீர் தொட்டி: தவிக்கும் மக்கள்
திருப்புவனத்தில் காட்சி பொருளாக தண்ணீர் தொட்டி: தவிக்கும் மக்கள்
ADDED : ஜூலை 10, 2025 02:55 AM

திருப்புவனம்: திருப்புவனத்தில் பேரூராட்சி சார்பாக வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகள் பல சேதமடைந்து காட்சி பொருளாக மாறி வருகின்றன.
வைகை ஆற்றங்கரையில் அமைந்திருந்தாலும் நகரில் உள்ள 18 வார்டுகளுக்கும் முழுமையாக குடிநீர் விநியோகம் செய்ய முடிவதில்லை. திருப்புவனம் வைகை ஆற்றில் இரு இடங்களில் கிணறு தோண்டப்பட்டு 18 வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இதுதவிர ஒவ்வொரு வார்டுகளிலும் மூன்று முதல் ஐந்து இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன் வரை ஒரு தண்ணீர் தொட்டி அமைக்க ஒரு லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது இரண்டரை லட்ச ரூபாய் வரை ஒதுக்கப்படுகிறது.
ஆனாலும் நீரோட்டம் இல்லாத இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டதால் கிணறுகளில் தண்ணீர் இன்றி தொட்டிகள் காட்சிப்பொருளாக மாறி வருகின்றன. மேலும் இதற்காக அமைக்கப்பட்ட மின்சாதன பொருட்களும், பிளாஸ்டிக் பைப், மோட்டார் மாயமாகி வருகின்றன.
திருப்புவனத்தில் 18 வார்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நகரில் குறைந்தது 100 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 60 சதவிகித கிணறுகள் பயன்பாட்டில் இல்லை. பயன்பாட்டில் இல்லாத தண்ணீர் தொட்டி, மோட்டார், மின்சாதன பொருட்களை பேரூராட்சி நிர்வாகம் திரும்ப எடுக்காமல் அப்படியே விட்டு விடுகின்றன. இரவில் சமூக விரோதிகள் இதனை திருடி விற்பனை செய்து விடுகின்றனர்.
தண்ணீர் தொட்டி சேதமடைந்ததால் அதனை காட்சிப் பொருளாக அப்படியே உள்ளது. கோடை காலம் என்பதால் தண்ணீரின்றி மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் பழுதடைந்த தண்ணீர் தொட்டிகளை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.